ஆதித்தன்
கொரோனா பேரிடர் என்பது இந்த உலகை நிலை குலையச் செய்கிறது. இந்த நோய் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் மக்களுக்கு இன்னமும் தேவைப்படுவதுடன் தடுப்பூசி குறித்த அச்சத்தையும் போக்க வேண்டியிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன் களப் பணியாளர்களாக சுகாதாரத்துறையினர் நிற்கின்றனர். பொதுமுடக்கம் என்பதும் மக்களின் பௌதீக ரீதியான தொடர்பாடலைத் தடுப்பதும்தான் இந்த நோயில் இருந்து உலகம் தன்னை காத்துக் கொள்ளக்கூடிய வழியாக .இருக்கிறது. இந்த சூழலில் இலங்கையில் துப்பாக்கிகள் மற்றும் இராணுவ டாங்கிகளைக் கொண்டு கொரோனவை தடுக்கிற வேலையும் நடக்கிறது.
அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த சமயத்தில், கொரோனா நோய்க்கிருமிகள் இலங்கை அரச படைகளுக்கு தோழமை சக்தியாகிவிட்டன. அவற்றின் துணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரச படைகள் மேற்கொண்டன. அன்றைக்கு வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவத்தின் மிகவும் கோரமான நிலையில் நின்றனர். துப்பாக்கிகளை ஏந்தியபடி இராணுவ பீல் பைக் அணிகள் கிராமங்களுக்கு மக்களை பயமுறுத்தும் விதமாக உறுமிக் கொண்டு திரிந்தன. வழமைக்கு மாறாக இராணுவத்தின் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டன. வீதிகள், சந்திகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் தடுக்கப்பட்டார்கள்.
கொரோனா காலத்தில் எப்படியான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்று தமிழ் மக்களுக்குத் தெரியும். சுகாதார வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். அன்றைக்கு வடக்கு கிழக்கே கனத்த நெஞ்சுடன் இருந்தது. எங்கள் தேசம் சோகத்தில் இருந்தது. ஆனால் அதனை இன்னும் ஒரு போர்க்கள நிலமாக மாற்றும் அத்தனை காரியங்களையும் இலங்கை அரச படைகள் செய்தன. அன்றைக்கு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அது தனித்த ஒரு தேசமாகவே தென்பட்டது. தெற்கை ஒருவிதமாகவும் வடக்கு கிழக்கை இன்னொரு விதமாகவும் நடத்துவது என்பது நிச்சயமாக இரண்டு தேசங்களையும் பிரித்துக்காட்டுகின்ற செயல்தான். அது தமிழ் மக்களிடமிருந்து வரவில்லை. சிங்கள அரசிடமிருந்தும் அதன் படைகளிடமிருந்துமே வருகின்றன.
அத்துடன் முள்ளிவாய்க்கால் 18ஐ முன்னிட்டு இலங்கை அரச படைகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டன. அன்றைய நாளில் சிங்கள இனவழிப்பு படையை சேர்ந்த 452 அதிகாரிகளுக்கும் 4289 சிப்பாய்களுக்கும் கடற்படையை சேர்ந்த 64 அதிகாரிகளும், 1904 சிப்பாய்களும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மே 18 என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய இனவழிப்பு பரிசளிக்கப்பட்ட நாள். அந்த நாள் பதவி உயர்வுக்கும் இலங்கை இராணுவப் பெருமைக்கும் உரிய நாளாக இருக்கிறது, என்பதும் தமிழர் தேசத்திற்கு வலுத்த சேதியை சொல்கிறது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட ஒரு நாள் அது. இந்த தீவின் பூர்வீகக் குடிகள் ஒன்றரை லட்சம் இல்லாமல் ஆக்கப்பட்ட நினைவழியாத தினம் அது. தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் ஈடு செய்ய முடியாத பெரும் உயிரழிவு நிகழ்த்தப்பட்ட நாள். அந்த நாளில் இலங்கை அரசு தனது படைகளுக்கு பதவி உயர்வு வழங்குகிறது என்றால், நிச்சயமாக ஈழத் தமிழ் மக்களை கொன்றழிப்பதற்கான பரிசாகவும் பாராட்டாகவுமே அதனைக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த செய்தியைதான் இந்தமுறை மே 18 இல் தென்னிலங்கை அரசு தமிழர்களுக்கு தந்திருக்கிறது.
இராணுவ மயத்தை குறைக்க வேண்டும், சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இருக்கக்கூடாது என்றும் தமிழர்கள் கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்திருக்கிறார்கள். இது சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் ஐ.நா அறிக்கைகளிலும்கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் கொரேனாவின் பெயரால் இராணுவமயத்தை பெருக்கும் வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றனர். ஊடரங்கு தளர்த்தப்படும் வேலைகளில் இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். சமயம் பார்த்து தமிழின வெறுப்பை இராணுவத்தினர் வெளிப்படுத்துவதை மிகத் தெளிவாக உணர முடிகின்றது.
மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்குவதால் கொரோனாவை ஒடுக்க முடியாது. உலகில் இராணுவச் சீருடை கொண்டும், துப்பாக்கிகள் கொண்டும், யுத்த டாங்கிகள் கொண்டும் கொரோனாவை அழிக்க முனையும் அறிவுபூர்வமான படைகளாக இலங்கைப் படைகள் சிறப்பு பெறுகின்றனர். தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினார் மிகக் கசப்பான அனுபவங்களைக் கண்டிருக்கிறார்கள். எமது உறவுகள் ஒன்றரை லட்சம் பேர் இல்லாமல் ஆக்கப்பட்ட குற்றத்தில் தொடர்புடைய இராணுவத்தினர் இன்று கொரோனா தடுப்பு என்ற பெயரில் எமது வீதிகளில் நின்று மீண்டும் எம்மை அடக்கி ஒடுக்க முயல்கின்றனர்.
வெளிநாடுகளைப் போல, சிவில் நிர்வாகத்தைப் பயன்படுத்தி கொரேனா தடுப்பு விதிகளை மீறுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். கொரோனாவை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நீதி, நிர்வாகம் மற்றும் சட்டத்தை இல்லாமல் செய்ய முடியுமா? உலகில் எந்த நாடுகளில் இப்படி நடக்கின்றன? அல்லது சர்வதேச சட்டங்கள் இதனை அனுமதிக்கின்றனவா? நோய் என்பது மனிதாபிமானத்துடனும் சுகாதாரத்துடன் தொடர்புடைய விடயம். இது இரத்தம் காண்பதற்கான யுத்தம் இல்லை. சுகாதாரத் தொண்டர்களைப் போல இலங்கை இராணுவத்தினர் நடந்துகொள்ளவில்லை. அப்படி அவர்களால் நடக்க முடியாது என்பதையும் நாம் நன்கு அறிந்தவர்கள்.
இந்த நாடு கொரோனவை பயன்படுத்தி முழுமையாக இராணுவமப்படுகிறதா என்பதே இங்கே எழுகின்ற வலுத்த கேள்வியாகும். ஏற்கனவே நாட்டின் அதிபர் இராணுவ அதிகாரி. பாதுகாப்பு செயலாளர் இராணுவ அதிகாரி. கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி இராணுவத்தளபதி. இவர்கள் அனைவரும் கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் இனப்படுகொலையாளிகள். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல குற்றங்களை சுமத்தியுள்ளன. தற்போது இவர்களே கொரோனாவை அழிக்க சபதம் எடுத்துள்ள படையினர்.
ஏற்கனவே இலங்கையில் சிறுபான்மை இனங்களில் உரிமைகளும் வாழ்வும் நசுக்கப்படுகின்றது. இந்த சூழலில் கொரோனாவின் பெயரால் மிச்சம் இருக்கும் வாழ்வையும் உரிமையையும் பறித்து, இலங்கைத் தீவை முழுமையான இராணுவ நாடாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. இதனை தடுக்க சர்வதேசம் முன்வரவேண்டும். ஏனெனில் கொரோனவைிடவும் கொடிய இலங்கை இராணுவத்தினர், கொரோனாவின் பலியை விடவும் தமிழர்களை பலியெடுக்கக்கூடியவர்கள் என்பதை கடந்த காலம் தெளிவாக உணர்த்தியுள்ளது.