‘கொரோனாப் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச கூட்டு நடவடிக்கையே தற்போது தேவையாக உள்ளது’ என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பு மருந்து விநியோகத்தில் சமநிலையை கொண்டுவர உலகத் தலைவர்கள் புதிய அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நான்கு பிரதான சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
செல்வந்த நாடுகள் மற்றும் வறிய நாடுகளுக்கு இடையே தடுப்பூசி சரிசமமாக வழங்கப்படாதது குறித்து கவலை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த கூட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் உலகெங்கும் 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பில், தடுப்பூசி வழங்குவதில் உள்ள இடைவெளி புதிய கொரோனா திரிபுகள் தோன்ற காரணமாகியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்து புதிய கொரோனா திரிபுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.
‘சுகாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவராதபட்சத்தில் கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து பரந்த அளவில் மீட்சி பெற முடியாது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. இதற்கு தடுப்பூசி பெறுவது முக்கியமானதாக உள்ளது’ என்று அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தடுப்பு மருந்து சமநிலையாக பகிரப்படாதது குறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தமது கவலையை வெளியிட்டு வருகிறது. செல்வந்த நாடுகள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி வழங்குவதை தவிர்த்து அதனை ஏனைய நாடுகளுக்கு அன்பளிப்புச் செய்யும்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.