கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுகாதார தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தடுப்பூசிகளை பங்கிடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாரிய பின்னடைவை கண்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாதுள்ளதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், சுகாதார தரப்பினரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் பாரிய சிரமங்கள் உள்ளதாகவும், மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம்.தௌபீக்கிடம் வினவிய போதே அவர் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கடந்த வாரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 450 தொற்றாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 712 வைரஸ் தொற்றாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 335 வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான நிலையில் மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுத்த வேண்டும் என்பதையே மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே உடனடியாக மக்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை சுகாதார அமைச்சிற்கும் நாம் கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார தரப்பினர் எமக்கு அறிவித்துள்ளனர். எனினும் இப்போது வரையில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.