திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416 332 0269
“ உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே”
ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலின் காலமும், ஆரம்பமும் தெரியாதநிலையிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பழமைவாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாக, ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் காணப்படுகின்றது. இக்கோயிலின் கருவறையில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் உள்ளடக்கிய பிரதேசத்தினை மண்முனைப்பற்று என அழைப்பர்.
மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள அனேகமான கோயில்களின் வரலாற்றோடு, வேடர்களின் பெயர்கள் தொடர்புபட்டுக் காணப்படும். இக்கோயிலின் ஆரம்பமும் காத்தான் என்னும் வேடர் தலைவனோடு தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. காத்தான் என்னும் வேடர் தலைவனொருவன்; காத்தான்குடியிருப்பு என்னுமிடத்திலே வசித்து வந்தான். வேட்டையாடுதலையும், மீன்பிடித்தலையும் தொழிலாகக் கொண்டு காத்தான் வாழ்ந்து வந்தான். ஒருநாள் வாவியில் மின்பிடிக்கச் சென்றபொழுது, வாவிக்கருகிலிருந்த பற்றை ஒன்றினுள் ஒரு கல் விக்கிரகத்தைக் கண்டெடுத்தான். அந்த விக்கிரகத்தைப் பயபக்தியோடு எடுத்துச் சென்று, விக்ரகம் கிடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஆலமரத்தின் கீழ் வைத்து வணங்கி வந்தான். இதுவே காலகதியில் ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலாக மாறியது.
ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் பற்றியும், வேடர்தலைவன் காத்தான்பற்றியும் ஐதீகங்கள் பல, வழக்கிலே காணப்படுகின்றன. காத்தான் என்பவன் ஒரு பெரிய கோயிலைக்கட்டி, அதனுள் தங்க வேலாயுதம் ஒன்றினை வைத்துப் பூசை செய்து வந்தான் என்றும், அக்கோயில் இருந்த இடம் கோயில்குளம் என அழைக்கப்பட்டதெனவும் கூறுவர். கோயில் குளம் என்னும்பகுதி, பெரிய ஊராக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக, இப்பகுதியில் இடிபாடுகளுடனாக கட்டிடங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கருத்திற்கொள்ளும்போது, கோயிற்குளம் என்பது வளம்பெற்ற பெரிய ஊராக இருந்திருக்க வெண்டும் என்றும், இப்பகுதியை காத்தான் என்னும் ஒரு குறுநில மன்னன் ஆண்டிருக்கலாம் என்ற ஐதீகமும் காணப்படுகின்றது.
காத்தான் தொடர்பான மற்றுமொரு கதையும் மரபுவழியாகத் தொடர்கின்றது. ஆலயம் அமைந்துள்ள பகுதி, மிகப் பழைய காலத்தில் காத்தான் என்ற தமிழர் தலைவன் ஒருவனின் அதிகாரத்திற்குட்பட்டதாகக் காணப்பட்டது. அவன் தனது வழிபாட்டிற்கென தனது குலதெய்வமான குமரனுக்கு கோயில் அமைத்தான். ஆலயவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ஆலய வேலைகளைப் பார்வையிட வந்த காத்தான், ஆலமர நிழலிலே தங்கியிருந்தான். அப்பொழுது காத்தானுக்கு ஒரு தங்கவேல் தென்பட்டது. அதனை கண்டு ஆச்சரியப்பட்டபொழுது அந்தவேல் கல்லாகச் சமைந்துவிட்டது. ஆச்சரியமுற்ற காத்தான், தான் கட்டிய கோயிலில் கல்வேலை வைத்து வழிபாடியற்றி வந்தான். அவன் கோயில் கட்டியதாகக் கூறப்படும் இடம், கோயில் குளம் என்று கூறப்படுகின்றது. கோயில் குளம் பிரதேசத்திலே காணப்படுகின்ற, மாளிகை போன்ற கட்டிட இடிபாடுகளின் தடயங்களிலிருந்து, அது ஒரு குறுநில மன்னனின் இருப்பிடமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
காத்தான் பற்றிய மற்றுமொரு கதையை பழைய ஏடொன்றிலிருந்து திரு. சி.ப. கண்ணப்பன் என்பவர் 1887இல் பிரதி பண்ணி வெளியிட்டார். அப்பிரதியைப் பார்த்த திரு. சி. குலசேகரம்பிள்ளை என்பவர், 1980 ஆம் ஆண்டு பிரதி செய்து இக்கோயிலின் வரவுசெலவு அறிக்கையிலே சேர்த்துள்ளார். அக்கால வரலாறுகள் பற்றி குறிப்புக்கள் ஏடுகளிலே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏட்டிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ சில காலத்திற்கு முன் காத்தான் என்னும் பெயரையுடைய வேடன் இப்பகுதியில் இருந்தான். இவனுடைய தொழில் மீன் பிடித்தலும், மிருகவேட்டையாடுதலுமேயாகும். அக்காலத்தில் இருந்த குடிசனங்களில் இவனே மிகவும் அதிகாரம் வாய்ந்தவன். இவன் வசித்திருந்த காலம் 1692 ஆம் ஆண்டு, அதாவது கலியுகம் பிறந்து 4794 ஆம் வருடத்தின்பின் என்பதாகும். இவனோர் வந்தேறு குடியைச் சேர்ந்தவன். இவனது பரம்பரையினர் அக்காலத்தில் புத்தளப்பகுதியில் குடியேறியிருந்த தென் இந்தியராவர். இவன் வசித்திருந்த இடம் காத்தான்குடியென்னும் கிராமத்தின் மத்தியபகுதியாகும். அங்கிருந்து இவன் வழக்கம்போல, வலைகொண்டு தெற்கு நோக்கி வரும்போது. ஒருநாள் ஆற்றங்கரையோரமாக ஒரு பற்றைக்குள,; கல்லினாற் செதுக்கப்பட்ட ஒரு விக்கிரகங் கிடக்கக் கண்டு, அதை எடுத்து கிட்டடியாக மணல்செறிந்த இடமாயுள்ள ஒரு பெரும் விருட்சத்தடியில் வைத்து, அதை வணங்கிக் கொண்டு வந்தான். இவனோர் பிரமச்சாரியாதலின் அன்றுதொட்டு இவன் தனது சொந்த இருப்பிடத்திற்குப் போகாமல், விக்கிரகமிருந்த இடத்தையே தனது பதியாகக்கொண்டு சீவித்து வந்தான். மழைக்காலம் வந்ததும் அவ்விக்கிரகம் இருந்த இடத்தில் இலைகுழைகளினாலும், புல்லினாலும் வேயப்பட்ட ஒரு குடிசையை இயற்றி, அவ்விக்கிரகத்தையும் காப்பாற்றித் தனது தொழிலையும் வழமைபோலச் செய்து வந்தான்.”
இவ்வாறு காத்தான் விக்கிரகத்தை வைத்து வணங்க ஆரம்பித்த இரண்டொரு வருடத்திற்குள,; இவ்வூரிலே கொடிய பேதிநோய் ஏற்பட்டது. ஊரிலுள்ள மக்களில் அனேகம்பேர் இந்நோயால் இறந்தனர். ஆயினும் காத்தானுக்கு எவ்வித நோயும் பீடிக்காது, உடல் ஆரோக்கியத்தோடு காணப்பட்டான். இதனைக் கண்ட மக்கள், காத்தான் வணங்கும் விக்கிரகத்தின் அருளாலேதான், காத்தானுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று உணர்ந்து, விக்கிரகத்தை வணங்கி வேண்டுதல் செய்தனர்.
தொடரும்…….