சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
மலேசியாவின் செம்பனை எண்ணெய் மற்றும் கையுறை தயாரிப்பு தொழிற்சாலைகளில் கொத்தடிமை முறை நிலவுகிறது எனும் குற்றச்சாட்டைக் கனடா விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
மனித உரிமைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வரும் கனடா இது தொடர்பிலான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
கனடா ஆண்டு தோறும் ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான செம்பனை எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
அண்மைக் காலமாக தொழிலாளர்களை மிகவும் மோசமாக நடத்திய குற்றச்சாட்டில் உலகின் முன்னணி செம்பனை எண்ணெய் மற்றும் ரப்பர் கையுறை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்த கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன.
“மலேசியாவில் செம்பனை எண்ணெய் ரப்பர் கையுறை தயாரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்“ என்று கனடாவின் வேலை வாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளது.
அதேவேளை தனிப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கனேடிய அரசு மறுத்துவிட்டது. கனடாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து மலேசியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சு இதுவரை கருத்து ஏதும் வெளியிடவில்லை.
எனினும் உதயனிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் கனடாவின் குற்றச்சாட்டை தாங்கள் மிகவும் தீவிரமான கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதவள சுரண்டல்களை மலேசியா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று மலேசிய நிறுனவங்களிடமிருந்து இறக்குமதியை தடை செய்தது.
செம்பனை எண்ணெய் பண்ணைகள் மற்றும் மற்றும் ரப்பர் கையுறைகளை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் மிகவும் அதிகப்படியான நேரங்கள் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுவதும், மோசமான குடியிருப்பு மற்றும் வேலைச் சூழல்கள், கொத்தடிமை நடைமுறை, அச்சுறுத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம், தேசிய அடையாள அட்டைகளைப் பறித்து வைத்து கொள்வது போன்ற அடாவடி நடவடிக்கைகளில் முதலாளிமார் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் பின்பற்றுகின்றனர் எனும் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக நிலவுகிறது.
இதன் பின்புலத்திலேயே கனடாவின் இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் விசாரணையை மலேசியாவின் புறந்தள்ள முடியாது, அதன் முடிவு மலேசிய செம்பனை எண்ணெய் தோட்டங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு விடியலைத் தேடித் தரக் கூடும் என்று அங்குள்ள தொழிற்சங்கத் தலைவர் பெருமாள் உதயனிடம் தெரிவித்தார்.
கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் போது, மலேசியா அதை மறுக்க முடியாது, அப்படிச் செய்தால் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ள உலகின் முன்னணி ரப்பர் கையுறை தயாரிப்பாளரான Top Glove மற்றும் உலகின் இரண்டு முன்னிலை செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர்களான Sime Darby Plantation மற்றும் FGV Holdings ஆகியவை இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறுகின்றனர்.
செம்பனை எண்ணெய் உணவுப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், இயற்கை எரிபொருள், கால்நடை உணவு, மருந்து தயாரிப்பு, தொழிற்சாலை தேவைகள் போன்று பல்துறைகளில் பெரியளவில் பயன்படுகிறது.