கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் வேகமாகப் அதிகரித்துவரும் B.1.617.2 வகையான கொரோணா திரிபு தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் வகையிலும், அதிகளவிலான மாணவர்கள், பாடசாலைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்கள் ஆகியோர் தமக்குத் தேவையான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்கும் பொருட்டும், மாகாணமெங்குமுள்ள சிறுவர் பாடசாலைகள் மற்றும் உயர் கல்லூரிகள் ஆகியன மாணவர்களுக்கு தொடர்ந்தும் இணையவழி ஊடாக வகுப்புகளை எதிர்வரும் 2021 இலையுதிர்காலம் வரை நடத்துவதென்ற முடிவினை ஒன்ராறியோ அரசாங்கம் எடுத்துள்ளது. இம்முடிவானது தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தவும், கோடைகாலத்தினைப் பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், வருகின்ற செப்டெம்பரில் ஆரம்பிக்கும் 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பவும் உதவியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
உளநலம் சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் அல்லது அவற்றுக்கான சாத்தியக்கூறுகளையுடைய மாணவர்களுக்கு பாதுகாப்பான திட்டங்களை கல்விச்சபைகள் தொடர்ந்தும் வழங்கும். இத்திட்டமானது இணையவழி ஊடாக அல்லது நேரடியான சேவைகளையுள்ளடக்கிய பாடசாலை, சிறுவர் மற்றும் இளையோர் உளநல சமுக சேவைகளை வழங்குவோர் அல்லது பிரதேச சுகாதார சேவை வழங்குனர்கள் ஊடாக தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். மெய்நிகர் வகுப்புகளில் கற்க முடியாத விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கென ஜூன் இறுதிவரை பாடசாலைகள் திறந்திருக்கும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பங்கள் தமக்கான உளநல சேவைளை மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 24 மணிநேர ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் போன்ற சேவைகளை வழங்கக்கூடிய கல்விச்சபைகள், சிறுவர்களுக்கான உதவி தொலைபேசி சேவை மற்றும் பிற சேவை வழங்குநர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன், ஒன்ராறியோ பாடசாலை உளநல சேவை மற்றும் மாநில சிறுவர் மற்றும் இளையோர் உளநல சேவை முகவர்களினூடாக கிடைக்கும் சேவைகளையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் இந்த தீர்மானம் தொடர்பாக தனது கருத்தை வெளியிடும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
“சிறப்பு உளவள சிகிச்சை சேவைகளுக்கென மக்கள் அணுகும் துறைகளை மேம்படுத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 31 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்குகிறது. இது, மேற்படி சேவைகளுக்கென காத்திருக்கும் காலத்தினை குறைப்பதுடன் கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் சிறுவர் மற்றும் இளையோர் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இந்நிதியானது மக்களின் ஆரோக்கியத்துக்கெனவும், சில பழங்கங்களுக்கு அடிமையான ஒன்ராறியோவிலுள்ள அனைத்து வயதினருக்குமான விரிவான ஒன்றிணைந்த உளநல திட்டத்துக்கெனவும் அரசாங்கத்தினால் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உறுதியளித்த 3.8 பில்லியன் நிதியுதவியின் ஒரு பகுதியாகும்.”
இந்த தகவல் , மாநில சட்டமன்ற உறுப்பினர், (ஸ்காபரோ – றூஜ் பார்க்).விஜய் தணிகாசலம் அவர்களது அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றதாகும்