“அண்மையில் இலங்கைக் கடல் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்னும் எமது கப்பல் தீப்பற்றியதால் இலங்கையின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதை நான் நன்கு உணர்கின்றேன் . அத்துடன் இலங்கைக்கு ஏற்பட்ட பல்வேறு வகையான பாதிப்புகளுக்கும் மற்றும் இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன வழங்கிய சேவைகளுக்கும் நாம் கட்டணங்களும் நட்டஈடும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம்”
இவ்வாறு தெரிவித்துள்ளார் மேற்படி சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சாமுவேல் யேஸ்கோவிட்ஸ்.
இலங்கையின் கரையிலிருந்து சுமார் 18 கிலோ மீற்றர் தூரத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்த மேற்படி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கோடிக்கணக்கான டாலர்கள் பெருமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் ஆகியனவும் இருந்தன என்பதும் இங்கு கு றிப்பிடத்தக்கது.
இணையவழி ஊடாக மேற்படி சாமுவேல் யேஸ்கோவிட்ஸ் சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகளோடு உரையாடுகையில் பின்வருமாறு தெரிவித்தார்.
“எமது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய காரணத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையே இழந்துள்ளார்கள் என்பதை அறிவோம்.அத்துடன் இலங்கை என்னும் அழகிய தேசத்தின் ஒரு பகுதி கடற் பிரதேசம் பாரிய சூழல் மாசடைவிற்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது என்றார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
அண்மையில் கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து, பாரியளவான சூழல் மாசடைவுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு சமூகப்பிரச்சினைகளும் தோற்றம்பெற்றுள்ளன.
முதலில் இலங்கை மக்களிடம் நான் எனது வருத்தத்தைத் தெரிவிக்கின்றேன். அதேவேளை இந்த அனர்த்தத்தின் காரணமாக பலரது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் சுற்றாடலும் பாரியளவில் மாசடைந்திருக்கிறது. அதற்காக நான் இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோருகின்றேன்.
சுமார் 10 நாட்களுக்கு முன்னர் இந்த அனர்த்தம் ஏற்பட்டதிலிருந்து சுற்றுச்சூழலுக்கு எண்ணெய்க்கசிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் கண்காணித்து, அதனைச் சீர்செய்யக்கூடிய சர்வதேச நிறுவனமொன்றுடன் தொடர்ச்சியாகத் தொடர்பினைப் பேணிவருகின்றோம். எனினும் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5 மணிவரையில் (நேற்று ) எண்ணெய் மாசுபாடுகள் எவையும் அவதானிக்கப்படவில்லை.
அதேவேளை இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மதிப்பீடு செய்வதென்பது தற்போது மிகவும் கடினமாக விடயமாக உள்ளது. எனினும் எக்பிரஸ் மீது நேரடியாக ஏற்படக்கூடிய நிதிச்சுமை என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இலங்கைக்கு நட்டஈடு வழங்கவேண்டியது அவசியமாகும். அதற்கு முன்னர் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்யவேண்டும். கப்பல் முழுமையாக மூழ்கியதன் பின்னர், பாதிப்புக்களை மதிப்பிட வேண்டும்.
நாம் ஏற்கனவே இலங்கையின் அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டமைப்புக்கள், கடற்படையினர் ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துவிட்டோம்.
சில கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை தற்போது முழுமையான முடக்கநிலையில் இருக்கின்றது. எனவே இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்களை ஒருங்கிணைப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும். எனினும் கடற்படையினர் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்துவதற்கு அவசியமான சில கனரக உபகரண உதவிகளைப் பெற்றுக்கொடுத்து, நாம் இயலுமானவரை எமது பங்களிப்பை வழங்கியிருக்கின்றோம். ஆனால் நாடு முடக்கப்பட்டுள்ளமையின் காரணமாக எம்மால் இலங்கை மக்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை.
தற்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதேவேளை சடுதியாக எண்ணெய்க்கசிவுகள் ஏற்படும்பட்சத்தில் அதனை முகாமை செய்வதற்கு ஏற்றவகையில் உரிய அதிகாரிகள் தொடர்ச்சியாக நிலைமையைக் கண்காணித்துவருகின்றனர்.
தீப்பரவல் ஏற்படுவதற்கு முன்னர் கப்பலில் இருந்த ஒரு கொள்கலனில் மாத்திரமே கசிவு ஏற்பட்டது. தீப்பரவல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கக்கூடியது எதுவென்பதை நிர்ணயிப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
கப்பலில் பல கொள்கலன்கள் பல்வேறு பொருட்கள் இருந்தபோதிலும், ஒன்றில் மாத்திரமே கசிவு ஏற்பட்டது. எனவே தீப்பரவலுக்கு அந்தக்கசிவே பெரும்பாலும் காரணமாக அமைந்திருக்கமுடியும். எனினும் அதனை 100 சதவீதம் உறுதியாக்கூறமுடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
கடற்பரப்பில் இதனைப்போன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதன்போது சில துறைமுகங்கள் உதவக்கூடிய நிலையிலிருக்கும் சில துறைமுகங்கள் அவ்வாறு இருக்காது.
கப்பலில் கொள்கலன்களில் பொருட்கள் மற்றும் பதார்த்தங்களை பொதியிடும்போது விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கப்பல் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துவருகின்றன.
கொள்கலன்கள் முழுமையாக மூடப்பட்டதன் பின்னர் அவை திறக்கப்படமாட்டாது. எனவே கொள்கலன்களை பொதிசெய்யும் கப்பல் ஊழியர்களின் திறமை மற்றும் அவர்களால் வழங்கப்படும் உறுதிப்பாடு ஆகியவற்றிலேயே இதன் நம்பகத்தன்மை தங்கியிருக்கின்றது.
எனினும் பல வருடங்களாகவே இத்தகைய தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன என்று குறிப்பிட்டார்.