(மன்னார் நிருபர்)
(8-06-2021)
வன்னி மாவட்டத்தில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான தீவனத்தினை பெற்றுக்கொள்ள முடியாத பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றிற்கான தீவனத்தினை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி வன்னி மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (8) மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களுக்கு குறித்த அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வீட்டில் கால் நடைகளை வளர்த்து வரும் கால் நடை பண்ணையாளர்கள் குறிப்பாக பால் தரும் நல் இன பசு மாடுகள் வளர்ப்பினை வாழ்வாதாரமாக கொண்டு அதனூடாக பெறப்படுகின்ற வருமானத்தினையே நம்பி அதிலே தங்கி தங்களது நாளாந்த வாழ்க்கையை நடாத்தி வருகின்ற மக்கள் இந்த பயணத்தடையின் மூலமாக இவ் கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாமையால் சிரமப்படுகிறார்கள்.
பல விதமான கஸ்டங்களையும் எதிர் நோக்குகிறார்கள்.
தீவனக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதனால் இவர்களுடைய கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாதுள்ளது.
இதனால் கால்நடை உயிரினங்களுக்கு உரிய உணவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உரிய தீவனத்தினை கால் நடைகளுக்கு வழங்க முடியாமையினால் உரிய பலனை பெற முடியாத நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இவ்வளவு காலமும் கிடைத்த வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் விளைவாக உரிமையாளர்கள் தங்களுடையதும் தங்களை சார்ந்து வாழ்பவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த பயணாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதினால் அதனூடாக ஈட்டப்பட்டு வந்த வருமானம் அறவே இல்லாமல் போயுள்ளது.
ஆகவே இவ் தீவன விற்பனையாளர்கள் இதனை பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய வகையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யலாம் அல்லது மக்கள் அத்தியாவசிய தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது போன்று இவ் தீவன நிலையங்களையும் திறந்து பொருட்களை விற்பனை செய்ய உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் சாலச்சிறந்ததாக அமையும்.என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது