அண்மையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிகழ்வை அவதானிப்பதற்காக அங்கு சென்றிருந்த அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஸபக்ச சிறந்த சேவையாற்றிய அரச அதிகாரிகளையும் பொறுமையைக் கடைப்பிடித்து அதிகாரிகளுக்கும் தாதியர்களுக்கும் ஒத்துழை பொதுமக்களையும் பாராட்டி மகிழ்ந்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள போதிலும், கொவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பணிகள் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தயாரிப்பான தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள், இரண்டாவது கட்ட தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்விடயத்தில் விசேட கரிசனை மேற்கொண்டிருந்தார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இந்த விசேட அக்கறை தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பெரிதும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இது ஒருபுறமிருக்க, கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் யாழ் மக்கள் காண்பித்த அக்கறை குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சீன தூதரகம் இது குறித்து பாராட்டொன்றை பதிவு செய்திருந்தது. தங்களது நாட்டுத் தயாரிப்பான தடுப்பு சீனோஃபார்ம் தடுப்பு மருந்தே யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு செலுத்தப்பட்டிருந்ததாலேயே சீன தூதரகம் யாழ் மக்களுக்கு இந்தப் பாராட்டை பதிவு செய்திருந்தது.இதைப் போலவே வடமாகாண ஆளுனர் அவர்களும் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
அதேசமயம் இராணுவத் தளபதியும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குப் பொறுப்பான பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் யாழ் மக்களுக்கான பாராட்டைத் தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் யாழ் மக்கள் காண்பித்துள்ள அக்கறை தொடர்பாகவே ஜெனரல் சவேந்திர சில்வா இந்தப் பாராட்டைத் தெரிவித்திருந்தார். ஏனெனில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக யாழ் மக்கள் விசேட அக்கறையை காண்பித்ததே இதற்கான காரணம் ஆகும்.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கான உறுதியான ஒரேயொரு தீர்வு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதுதான் என்பதை யாழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளதை அங்கு அவதானிக்க முடிந்ததாக யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவ சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை சிறந்ததொரு விழிப்புணர்வு முன்மாதிரியாகவே நாம் கொள்ள வேண்டும்.
சீனாவின் தயாரிப்பான சீனோஃபாம் தடுப்பூசி தொடர்பாக ஒரு சில தரப்பினர் நம்பிக்கையின்மையை வெளியிட்டிருந்த போதிலும், கல்வியறிவில் மேல்மட்டத்திலுள்ள யாழ் மக்கள் உண்மையை தெளிவாகப் புரிந்து கொண்டவர்களாக தடுப்புமருந்தை ஏற்றிக் கொண்டமை புத்திசாலித்தனமான செயலாகும். சீனாவின் கொரோனா தடுப்பூசியானது இலங்கையில் மாத்திரமன்றி உலகின் வேறு பல நாடுகளிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள சில நாடுகளும் சீனாவின் தடுப்புமருந்தை தங்களது மக்களுக்கு வழங்கி வருகின்றன.
சீனா தனது நாட்டு மக்களுக்கும் சீனோஃபாம் தடுப்பு மருந்தையே வழங்கி வருகின்றது. இத்தடுப்பு மருந்தின் செயல்திறன் தொடர்பாக மருத்துவ சுகாதாரப் பிரிவினர் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளனர். உலகில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற நாடு சீனா ஆகும். அதேவேளை ஏராளமான உயிரிழப்புகளுக்குப் பின்னர் கொரோனாவை தனது நாட்டில் முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்ட நாடும் சீனா ஆகும்.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதை சீனா ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டிருந்தது. அந்நாடு தடுப்பு மருந்தை தயாரித்துக் கொண்டதும் சவாலை வெற்றி கொண்டதொரு சாதனையென்றே கூற வேண்டும். சீனாவின் தடுப்பூசியானது ஏனைய நாடுகளின் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில் செயல்திறன் ஆற்றலில் இரண்டாவது உயர் மட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறிருக்கையில், அது குறித்து வீணான அவநம்பிக்கைகள் அவசியமற்றவையாகும்.
உலகில் பொருளாதாரத்திலும், இராணுவ வல்லமையிலும் வேகமாக முன்னேறி வருகின்ற சீனா, சர்வதேச வல்லரசுப் போட்டாபோட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதன் விளைவாகவே கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து வல்லரசு நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்துவதும், சீனாவின் தடுப்பூசி தொடர்பாக தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதுமாக இருக்கின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி தொடர்பாக முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக இலங்கை மக்கள் எதுவித தயக்கமுமின்றி சீனோஃபாம் தடுப்பூசியை ஏற்றி வருகின்றனர். சீனா தனது நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்நாட்டின் தடுப்பூசியும் கைகொடுத்துள்ளது என்பதுதான் உண்மை.