க. வாகீசர்- கனடா
தான் சிறுவனாக படித்த பாடசாலை பின் நாளில் பல்கலைக் கழகமாகி, அப் பல்கலைக் கழகத்திலே பேராசிரியராக, துறைத் தலைவராக, பீடாதிபதியாக வருகின்ற பாய்க்கியம் எளிதில் எவருக்கும் கிடைக்காது. நான் அறிந்த வரையில் ஒருவர் தான் அந்த பாக்கியசாலி. அவர்தான் மௌஸ் என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற பேராசிரியர் மௌனகுரு அவர்கள்.
கிழக்கு பல்கலை கழகம் பற்றி சொல்லும்போது பேராசிரியர் மௌனகுரு என்கின்ற பெரும் ஆளுமையை தவிர்க்க முடியாது. ஏற்கனவே அவரை எனக்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தெரியும். எனினும் அறிமுகம் இல்லை. நான் கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு சென்ற நேரம் அவர்தான் கலைப் பீட பீடாதிபதி. வழுக்கை அற்ற வெண்ணிற முடி நிறைந்த தலை. முற்றாக சவரம் செய்யப்பட்ட, அழகிய கண்ணாடி அணிந்த, புன் சிரிப்புடன் கூடிய, ஒரு முதிர்ந்த கல்வியாளருக்கே உரிய முகத்தோற்றம். முதன் முதலில் கிழக்கு பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் கூடுகின்ற பொது அறையில் (STCR ) அவரை காண்கிறேன்.
ஒவ்வொரு பத்திரிகைகளையும் புரட்டி படித்துக் கொண்டு இருக்கின்றார். இடையில் கையில் உள்ள பத்திரிகையை வைத்து விட்டு ஏதோ யோசிக்கிறார். அந்த இடையில் என்னை நானே அவருக்கு அறிமுகம் செய்கின்றேன். ” இரண்டு மூன்று புதியவர்கள் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நல்வரவு, வாழ்த்துக்கள்
” என்று இனிய தமிழில் சொன்னார். மகிழ்ச்சி அடைந்தேன்.
பாடசாலை போன்று காட்சி அளித்த கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஒரு வளம் மிக்க அழகான பல்கலைக் கழகமாக மாற்றியமைத்ததில் பேராசிரியர் மௌனகுருவின் பங்களிப்பு மிக அதிகம். குறிப்பாக இரு தடவைகள் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக இருந்து, அப் பீடத்தை உயர் தரத்திற்கு உயர்த்தியதில் அவரின் பங்களிப்பு பதிவு செய்யப் படவேண்டியது ஒன்று.
மட்டக்களப்பில் உள்ள கூத்துக் கலைகள் சடங்குகள் பற்றி இன்று கிழக்கு பலகலை கழகத்தை சேர்ந்த பலரும் ஆர்வத்துடன் ஆய்வுகள் செய்கின்றனர். இதற்கு கிழக்கு பல்கலைக் கழகத்தில் கால்கோள் இட்டவர் பேராசிரியர் மௌனகுரு தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன். உலக நாடக விழா கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடாத்துவதற்கு பேராசிரியரின் பங்களிப்பும் அதிகம் இருந்தது. அண்ணாவி மார்களையும், இதர கலைஞர்களையும் உலக நாடக தினத்துக்கு அழைத்து அவர்களை வெளி உலகம் அறியும் படி செய்ததில் முதன்மை பெறுபவர் பேராசிரியர் அவர்களே.
பால சுகுமார், ஜெய்சங்கர் என்ற இரண்டு பெரும் ஆளுமைகள் உருவாகவும், கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு அவ் ஆளுமைகளின் பங்களிப்பு கிடைப்பதற்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்களே காரணம் என நான் நினைப்பதுண்டு. இம் மூன்று திறமைசாலிகளினால்தான் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் என்கிற துறையை நாடி அதிகளவு மாணவர்கள் வந்தமைக்கு காரணம் என்பது எனது தனிப் பட்ட அவதானிப்பு. இம் மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்த காலத்தில் உருவான புதியதொரு வீடு, இராவணேசன், வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், செம்பவளக் காளி, கொங்கைத் தீ, நவீன பஸ்மாசுரன், பிள்ளை அழுத கண்ணீர் போன்ற நாடகங்கள் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த என்போன்றவர்களையும் கலைத்துறையை நோக்கி இழுத்தது மட்டுமல்ல, பல கலைத்துறை மாணவர்கள் மட்டக்களப்பு கலை கலாச்சாரம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளவும் காரணமாக இருந்தது என்றால் அது மிகை இல்லை.
பேராசிரியரினால் கிழக்கு பல்கலைக் கழகத்தில் உருவான இன்னிய அணி, இன்று இந்தியா, கனடா, நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளிலும் நடத்தப் படுகின்றமை கிழக்கு பல்கலைக் கழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது . இசையும், நடனமும் மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரியை கிழக்கு பல்கலைக் கழகத்துடன் இணைத்து இசை, நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல அழகியல் பாடங்களை பயிற்றுவிக்கும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனமாக மாற்றியதிலும் பேராசிரியரின் பங்கு அளப்பரியது. அதன் தலைவராகவும் இருந்து அதன் தரத்தையும் உயர்த்திய பெருமகன் மௌனகுரு சேர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இராவணன் போன்றே எட்டுத்திக்கிலும் புகழ்கொண்ட எங்கள் பேராசானுக்கு இன்று பிறந்த நாள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழன் கலை வளர மேலும் பல தொண்டுகள் செய்ய இறைவன் அருள வேண்டும்.
அண்டங்கள் கண்டங்கள் ஆகாசமெங்கணும்
மிண்டு புகழ் கொண்டு வாழ்வோன்
குலையா உளத்தினன் சலியா மனத்தினன்
நிலையான பேர் கொண்டவன்
அறிவுத் திறத்தினால் அன்பு மனத்தினால்
அன்பர் புடை சூழ்ந்தவன்
ஆண்டவன் அருளுடன் ஆசிகள் பல பெற்று
வாழ்கவே பல்லாண்டு
அன்புடன்
க. வாகீசர்