திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416 332 0269
“அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவோர் முன்”
கோதாரிநோய் எனப்பட்ட பேதிநோய், காத்தானைப் பாதிக்காததையடுத்து, எல்லாம் அவன் வணங்கும் விக்கிரகத்தின் அருளே என்றெண்ணி, விக்கிரகத்திற்குப் பொங்கல், பூசைகள் செய்வோமென நேர்த்திக் கடன் செய்தனர். இதன்பின்னர் இரண்டொரு நாட்களில் பேதிநோய் இல்லாது போய்விட்டது. இவ்வாறான பல சம்பவங்களை புராணவரலாறுகள் ஆதிகாலத்தில் நடந்ததாக எடுத்துரைத்துள்ளன. ‘நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு’ என்பதற்கிணங்க முருகனின் அருள்பெற்ற பலரின் வரலாறு, இவ்வாறான சம்பவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கந்தசுவாமி என்னும் பெயரே முருகனின் சர்வ சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது.
“ சேயவன் வடிவம் ஆறும் திரட்டி நீ ஒன்றாய்ச் செய்தாய்
ஆயதனாலே கந்தனாம் நாமம் பெற்றான்”
என கந்தப்புராணம் குறிப்பிட்டுள்ளது. கந்து என்பது பற்றுக்கோடாகும். ஆன்மாக்களுக்கு பற்றுக்கோடாக விளங்குபவன் முருகன். தேவர்களின் துயர்தீர்த்து அருளியவனும் முருகனே. தன்னைத் தஞ்சமென்று வந்த ஆரைப்பற்று மக்களின் துயரைத் துடைத்து அருள் செய்தமைக்காக மக்கள் ஆரையம்பதி கந்தசுவாமியைப் போற்றியமை பொருத்தமானதே. நம்பிக்கைதான் கடவுள் என்பதை இம்மக்கள் ஆதாரமாகக்கொண்டு கந்தனிடம் தம்மை ஒப்படைத்து கோதாரி நோயிலிருந்து விடுபட்டனர்.
கோதாரிநோய் நீங்கிய அடுத்த வெள்ளிக்கிழமையே சனங்கள் ஒன்றுகூடி, விக்கிரகம் இருந்த இடத்தில் பொங்கல், பூசைகளை ஆரம்பித்து தவறாது செய்துவந்தனர். சில வருடங்களின் பின்னர் காத்தான் இறந்துவிட்டான். அதன்பின்னர் ஊரவர்கள் ஒன்றுசேர்ந்து குடிசை இருந்த இடத்தை கருவறையாகக் கொண்டு, கல்லினால் ஒரு சிறுகோயில் அமைத்து வழிபாடியற்றி வந்தார்கள். அதுவே தற்போதுள்ள கந்தசுவாமி கோயிலென அழைக்கப்படுகின்றது.
காத்தானால் கண்டெடுக்கப்பட்ட கல்விக்கிரகம், ஒரு பிள்ளையார் சொரூபமென்றும், ஆதியில் இக்கோயில் பிள்ளையார் கோயிலாகவே இருந்துள்ளது எனவும் கூறுவர். பின்னர் காலகதியில் இக்கோயில் கந்தசுவாமிகோயில்என வழங்கப்பட்டது. பிந்திய ஏட்டுக்குறிப்பின்படி, காத்தான் என்பவன் கண்டெடுத்தது பிள்ளையார் விக்கிரகம் என்பதும், பிள்ளையாருக்குக் கோயில்கட்டி கந்தசுவாமியென வணங்கினான் என்பதும் வேறொரு மரபுவழிக்கதையாகக் காணப்படுகின்றது. காத்தான் என்னும் வேடனாற் கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் கல்விக்கிரகம் கோயிலிலே காணப்படுகின்றது. இவ்வாறாக பிள்ளையார் கோயிலாக இருந்து முருகன்கோயிலாக மாற்றம்பெற்ற பல கோயில்கள், மட்டக்களப்பில் பல இடங்களிலே காணப்படுகின்றன. முருக வணக்கம் மக்களிடையே பிரபல்யம் பெற்றதன் விளைவாகவே இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் கொள்ள முடியும்.
காத்தான் என்பவர் இறந்த பின்னர், ஆரைப்பறைச் சேர்ந்த தனவந்தராகிய நாகப்பர் என்பவர், இக்கோயிலைப் பெருப்பித்துக் கட்டினார். இவர் இறந்தபின்னர் திருவிளங்கு குடியினரைச் சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து, தாங்களும் பணம்போட்டு மக்களிடமும் நிதிசேகரித்து இக்கோயிலின் வெளிமண்டபம், மதில் ஆகியவற்றை கட்டி முடித்தார்கள். இதன்பின்னர் வெளிமண்டபத்திலே கொடித்தம்பமும் நாட்டப்பட்டது. இவ்வாறு மாறிமாறி பலரது பராமரிப்பில் இருந்த ஆரப்பற்றை கந்தசுவாமி ஆலயம், சிறிது காலத்தின்பின்னர் ஊர்மக்களின் அதிகாரத்திற்குள் வந்தது. இதனைத் தொடர்ந்து தம்பலகாமத்திலிருந்து, ஒரு பூசகரை இவ்வாலய பூசகராக நியமித்தனர். இக்கோயில் கட்டப்பெற்றபின்னர் பலதடவைகள் கும்பாபிஷேகப் பெருவிழாஇடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலுக்கும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கும் குளக்கோட்டு மன்னன் காலத்திற்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்பு இருந்துவருகின்றது. இத்தொடர்பினை எடுத்தக்காட்டும் நிகழ்வுகள், இரு கோயில்களின் மகோற்சவகாலங்களில் இடம்பெறுவதைக் காணலாம். இக்கோயிலின் மகோற்சவம், புரட்டாதி பூரணையில் நடைபெறும் தீர்த்த உற்சவத்தோடு நிறைவுபெறும். மாதந்தோறும் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்தில் சிறப்பான பூசைகள் இடம்பெறும். திருவெம்பாவைபூசை பத்துநாட்களும் சிறப்பாக நடைபெற்று, பத்தாவதுநாள் தீர்த்தத்தோடு நிறைவுபெறும். இவ்வாலயத்திலே கந்தசஷ்டிப்பெருவிழா மிகச்சிறப்பாக விரதமாகவும், விழாவாகவும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
காத்தான் என்பவரை மையமாகக் கொண்டு ஆரையம்பதி கோயிலின் ஆரம்பம்பற்றி வழக்கிலே பல கதைகள் காணப்படுகின்றன. ரூடவ்ழத்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க பல கோயில்களின் நிலை இவ்வாறுதான் காணப்படுகின்றது. எத்தனையோ தடயங்கள் வரலாற்றைக் தெளிவுபடுத்துவதற்கு ஆதாரமாக இருந்தாலும், அதனை செயற்படுத்தமுடியாத சூழ்நிலை இலங்கையிலே காணப்படுகின்றது. இக்காரணத்தினால் ரூடவ்ழத்திலுள்ள தமிழர்களின் நிலப்பரப்பும், தமிழர்கள் ஆண்ட செய்திகளும், வரலாறுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பாடாக கர்ணபரம்பரைக் கதைகளே தொடர்கின்றன. இவ்வாறான ஒரு நிலைதான் பழம்பெருமைகள் பல கொண்ட ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலோடும் இரண்டறக் கலந்து காணப்படுகின்றது.
“வேண்டிய வரங்கொடுப்பான் மெய்கண்ட தெய்வம்
இத்தெய்வமல்லால் புவியில் வேறில்லை”
என்ற குமரகுருபர சுவாமிகள் திருவாக்கிற்கமைய, கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் முருகன், வேண்டியவர்க்கு வேண்டியாங்கு அருளி, கலியுக வள்ளலாக ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலிலே எழுந்தருளியுள்ளான்.
தொடரும்…..