இலங்கையில் கடந்த சில தசாப்பதங்களாக அரச நிர்வாக உயர் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு பிரகாசமாகத் தெரிகின்றது. அவர்களின் சிங்களப் பெண்மணிகள் மட்டுமல்ல தமிழ் பேசும் பெண்மணிகளும் குறிப்பிடத்தக்க அளவில் நியமனம் பெற்று சிறந்த சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களில் குறிப்பாக தற்போதைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகிய பதவிகளை வகிக்கும் பெண்மணிகள் இருவரும் சிறந்து சேவையாற்றி மக்களினதும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ளார்கள்.
இந்த வரிசையில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முதலாவது பெண் பிரதிப் பணிப்பாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணியாற்றிய திருமதி இமேஷா முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
அவரது சேவைக்காலத்து பதவிகள் பற்றிய குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-
கடந்த 2007.11.03 இல் பயிலுனர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 14 வருட பொலிஸ் சேவையினை கொண்டுள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் BSc பட்டத்தை பெற்றுள்ள அவர், திறந்த பல்கலைக்கழக LLB பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், அமெரிக்காவின் ஹவாய் பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில், நெருக்கடி முகாமைத்துவ பாடநெறி, தாய்லாந்தின் பங்கொக்கில் FBI நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பண தூய்மையாக்கலை தடுக்கும் பாடநெறி, மலேசியாவின் ரோயல் பொலிஸ் அகடமியில் பிரஜா பொலிஸாக்கம் தொடர்பான பாடநெறி, இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸ் அகடமியில் இணைய குற்றம் (Cyber Crime) தொடர்பான பாடநெறி உள்ளிட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்துள்ளார். அவர், நுகேகொடை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் நற்சான்றிதழ் பிரிவு ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார்