கனடாவில் மாகாண அளவில் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி வீதம் மற்றும் கிடைக்கப்பெற்றுள்ள பொது சுகாதார தரவுகளின் முன்னேற்றங்களின் அடிப்படையிலும், ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார தலைமை அதிகாரிகாரியுடனான ஆலோசனையின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் .இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு ஒன்ராறியோ அரசாங்கம் மாகாணத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முதலாம் கட்ட நிலைக்கு செல்லவுள்ளது.
இத்திட்டத்தின்படி, இதன் முதற்கட்டத்தின் ஒரு பகுதியாக நோய்ப்பரம்பலுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகக் காணப்படும் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் வெளியரங்குகளில் சிறு அளவிலான ஒன்றுகூடல்களை மீண்டும் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் கட்டுப்பாடுகளுடன்கூடிய வரையறைகளுக்கு உட்பட்டு உள்ளக இடங்களை மீளத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படும்.
ஒன்றாரியோ மாகாண சுகாதார தலைமை அதிகாரியுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், ஒன்ராறியோ அரசு முதலாம் கட்ட மீள ஆரம்பிக்கும் திட்டத்தின்படி திருமணம், இறுதிச் சடங்குகள் போன்ற உள்ளரங்கத்தில் நடைபெறும் மத வழிபாடுகள், சடங்குகள் மற்றும் விழாக்களை கட்டடம் ஒன்றின் உள்ளடக்கத்திறனின் 15 வீதம் வரையான மக்களுடன் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவுள்ளது.
மீளத் திறப்பதற்கான திட்டத்தின்படி பின்வருவனவும் இவற்றில் அடங்கும்:
– வெளியரங்க சமுக மற்றும் பொது ஒன்றுகூடல்களில் 10 நபர்கள் வரை பங்குகொள்ளலாம்,
– திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட வெளியரங்க மத வழிபாடு, சடங்குகள் அல்லது விழாக்கள் போன்றவற்றில் இரண்டு மீட்டர் தனிநபர் இடைவெளியினை கடைப்பிடிக்கக்கூடிய அளவில் மக்கள் ஒன்றுகூடலாம்,
– திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட உள்ளரங்க மத வழிபாடு, சடங்குகள் அல்லது விழாக்கள் போன்றவற்றில் மண்டபத்தின் உள்ளடக்கத்திறனின் 15 வீதம் வரையிலான மக்கள் கலந்துகொள்ளலாம்,
– அத்தியாவசியமற்ற பொருள் விற்பனை நிலையங்கள் அவற்றின் உள்ளடக்கத்திறனின் 15 சதவீதம் வரையான மக்களுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்படும். விற்கப்படும் பொருட்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.
– அத்தியாவசிய மற்றும் குறிப்பிட்ட சில சில்லறை விற்பனை நிலையங்கள் அவற்றின் உள்ளடக்கத் திறனின் 25 சதவீதம் வரையான மக்களுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்படும். விற்கப்படும் பொருட்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.
– வெளியரங்க உணவகங்களில் ஒரு மேசைக்கு நால்வர் விகிதம் உணவருந்தலாம். அதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய குடும்பங்களுக்கு விதிவிலக்கு உள்ளது.
– வெளியரங்க உடற்பயிற்சி வகுப்புகள், வெளியரங்கிலான தனிப்பட்ட அல்லது குழு பயிற்சி அல்லது விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றை 10 வரையான நபர்களுடன் நடத்த அனுமதி உண்டு.
– சுகாதார தலைமைச் செயலகத்தினால் வழங்கப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய சிறுவர்களுக்கான ஒருநாள் வெளித்தங்கல் முகாம்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
– வெளித்தங்கல் முகாம் மைதானங்கள் அவற்றுக்கான பிரதேசங்களில் இரவு வெளித்தங்கல் முகாம்கள், பூங்காக்கள் மற்றும் குறுகிய கால வாடகை தொடர்பானவைக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
– இசைக் கச்சேரி அரங்குகள், நாடக அரங்குகள், திரையரங்குகள், முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட அல்லது திரையிடப்படும் கலை நிகழ்ச்சிகள், 10 இற்கு உட்பட்ட கலைஞர்களைக் கொண்ட ஒத்திகை அல்லது கலை நிகழ்ச்சிகளை கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வெளியரங்குகளில் நடத்தலாம்.
– பார்வையாளர்கள் பங்குபெறாத குதிரைப் பந்தய மைதானங்கள், அதிவேக வாகன போட்டி மைதானங்கள் திறப்பதற்கு அனுமதி,
– மிருகக்காட்சிசாலைகள், வரலாற்று கட்டடங்கள், மையங்கள், இடங்கள், தாவரவியல் பூங்காக்கள் போன்ற வெளியரங்க பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமது வழங்கப்படுகின்றது.
– பொது சுகாதார அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் ஏதேனும் முக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என்பதனை மதிப்பீடு செய்வதற்கான காலமாக இந்த முதலாம் கட்டத்தின் 21 நாட்களும் அமைந்திருக்கும்.
– 21 நாள் காலப்பகுதியின் முடிவில் ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள வயது வந்தவர்களில் 70 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும், 20 வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றும், பொது சுகாதார தரவுகளில் முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பின், மாகாணம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகரும்.
– ஒன்றாரியோ மாகாணம் இன்று 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் வரை மாகாணத்தில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் அப்படியே இருக்கும்.
– இக்காலகட்டத்தில் குறிப்பிட்ட துறைகள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்பு போன்றவை மீளத்திறக்கும் திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளில் மாகாண அரசு தொடர்ந்தும் அவற்றுடன் இணைந்து செயலாற்றும் என்பதுடன் அவற்றையும் உறுதிப்படுத்தும்.
இவ்வாறு காணப்படும் ஒன்றாரியோ மாகாண அரசின் அறிவிப்பை உதயன் ஆசிரிய பீடத்திற்கு அனுப்பிவைத்தவர் விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர், ஸ்காபரோ – றூஜ் பார்க் ஆவார்.