சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
மன்னிப்பு எனும் மாபெரும் தத்துவத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது கிறிஸ்தவம். கர்த்தராகிய இயேசுபிரான் தனது வாழ்நாளில் இந்த மாண்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். புனித வேதாகமம் மன்னிப்பு கோருவது மற்றும் மன்னிப்பது குறித்து பல இடங்களில் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் பேசுகிறது.
புதைகுழி என்றாலே குலை நடுங்கும்.
மன்னார், செம்மணி, இன்னும் எவ்வளவோ அறிந்ததும், அறியாததும். புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் போதும் பதில்களை விட கேள்விகளே அதிகம் எழும். ஆன்றோர் முதல் சான்றோர் வரை, அரசன் முதல் ஆண்டி வரை கருத்து தெரிவிப்பது, கண்டனம் வெளியிடுவது, கண்ணீர் வடிப்பது ஆகியவை வழக்கமாக நடைபெறும் விஷயங்கள்.
ஆனால் அதற்குப் பிறகு என்ன? நடந்தது நடந்துவிட்டது, மறப்போம் மன்னிப்போம் போன்ற பழைய பல்லவிகள்.
இப்போது கனடாவில் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட பாடசாலை ஒன்றின் புதைகுழியிலிருந்து 215 சிறார்களின் உடல் எச்சங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது `மிகவும் வேதனையான` விஷயமாகும் என்று போப் பிரான்சிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்.
எனினும் கனடாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த கண்டெடுப்பு குறித்து அவர் `வேதனை` வெளியிட்டிருந்தாலும் வருத்தமோ அல்லது அதற்காக மன்னிப்போ கோரவில்லை.
கத்தோலிக்கதிருச்சபையால் நடத்தப்பட்ட அந்த உறைவிட பாடசாலையில் நடைபெற்று மூடி மறைக்கப்பட்ட ஊழல்- கனடாவை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிலையில் இது குறித்து போப் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
“215 பாடசாலை மாணவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கனடாவிலிருந்து வரும்செய்திகளை நான் மிகவும் மன வேதனையுடன் கவனித்தேன்“ என்று கடந்த ஞாயிறன்று புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கூறினார்.
“மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் இந்தச் செய்தியால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் கனேடிய மக்களுக்கு ஆறுதல் கூறி துணை நிற்கும் கனேடிய ஆயர்கள் மற்றும் கனடாவில் இருக்கும் முழு கத்தோலிக்க தேவாலயங்களுடன் நானும் பங்குபெறுகிறேன்“ என்று கடந்த ஞாயிறன்று தனது வாராந்திர ஆராதனையின் போது போப் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற வலி மிகுந்த சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட வேதனைகளும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அதிகரித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார் போப் பிரான்சிஸ்.
இணக்கப்பாடும் ஆற்றுப்படுத்தலும்
கனடாவின் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் “வேதனையான இந்தச் சம்பவம் குறித்து கவனம் செலுத்தி“ நாட்டில் “இணக்கப்பாடு மற்றும் ஆற்றுப்படுத்தல் வழிமுறைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரியுள்ளார் போப்.
இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து“ஆழ்ந்த துக்கத்திலிருக்கும் பூர்வகுடி மக்களின் குடும்பங்களுக்கும் கனடாவிலிருந்து சமூகங்களுக்குமாக“ தான் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.
கடந்த மாதம் இந்தச் சிறார்களின் எச்சங்கள் காம்லூப்ஸ் இந்திய உறைவிடப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டது கனேடிய சமூகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள காம்லூப்ஸ் இந்திய உறைவிடப் பள்ளியில் இடம்பெற்ற மரணங்களுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டுமென்று பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கோரியுள்ளார்.
கனேடிய அரசு இந்தச் சம்பவம் தொடர்பில் “ காத்திரமான நடவடிக்கை“ எடுக்கும் என்று தெரிவித்த பிரதமர், கனடாவிலுள்ள கத்தோலிக்க சமூகம் தமது தேவாலயம் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனும் செய்தியை தெட்டத் தெளிவாக கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“கத்தோலிக்க திருச்சபையை நீதிமன்றத்திற்கு இழுக்கும் நடவடிக்கையை நாம் தொடங்குவதற்கு முன்னர், இதில் தாங்களும் பங்குபெற வேண்டிய கடப்பாடு உள்ளது என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்“.
“மன்னிப்பு கோர வேண்டும்“
காம்லூப்ஸ் பள்ளி எச்சங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, “நீதி, ஆற்றுப்படுத்தல் மற்றும் இணக்கப்பாடு குறித்து பேசுவதற்கு முன்னர் எமக்கு உண்மை தெரிய வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, கனேடிய உறைவிட பள்ளி கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருந்த பங்கு குறித்து போப் பிரான்சிஸ் அதிகாரபூர்வமான மன்னிப்பைக் கோர வேண்டும் என்று கனேடிய அரசு கோரியுள்ளது.
நடைபெற்ற சம்பவம் குறித்து கனடாவும் வத்திகானும் முழுமையான விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐ நாவின் மனித உரிமை வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வான்கூவர் பேராயர் ஜே. மைக்கேல் மில்லர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திருச்சபை சார்பில் தான் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் கனேடிய அரசின் சில அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் இதற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
நாகரிகப்படுத்தல் எனும் நடவடிக்கை
கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கனடாவிலிருக்கும் பூர்வகுடி மக்களை மைய நீரோட்ட சமூகத்தில் உள்வாங்கும் நோக்கோடு 139 உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டன. அப்படி ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளில் காம்லூப்ஸ் இந்திய உறைவிடப் பள்ளியே மிகவும் பெரியது. அங்கு ஒரே சமயத்தில் 500 பேர் வரை கல்வி பயின்றனர்.
அந்தப் பாடசாலை கனேடிய அரசின் சார்பில் கத்தோலிக்க திருச்சபையால் 1890 முதல் 1969 வரை நடத்தப்பட்டது. பிறகு அதை நேரடியாக பொறுப்பேற்ற கனேடிய அரசு, பத்தாண்டுகளுக்குப் பிறகு அதை மூடிவிட்டது.
மேற்கத்திய விழுமியங்களை உள்வாங்கும் நோக்கில் பூர்வகுடி மாணவர்களை “நாகரிகப்படுத்துவதே“ இந்த உறைவிட பள்ளிகளின் நோக்கமாக இருந்தது. இது மறைமுகமாக பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கை மற்றும் கலாச்சார இனப்படுகொலை என்று சட்டவல்லுநர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
அந்தப் பாடசாலையில் ஒரு முறை அங்குள்ள மாணவர்களுக்கு சீரான உணவளிக்க கூடுதல் நிதியுதவி தேவை என்று மன்றாடியதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 50 சிறார்களே மரணமடைந்தனர் என்று அதிகாரபூர்வாக ஆவணப்படுத்தப்பட்டு கூறப்பட்ட நிலையில், தற்போது அதியுயர் தொழில்நுட்பத்தின் மூலம் 200க்கும் அதிகமானவர்கள்- காம்லூப்ஸ் பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
திட்டமிட்ட அழிப்பு
அதேவேளை அங்கிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் அங்கிருந்த போது பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகளால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமது தலைமுடி வெட்டப்பட்டதுடன் தங்களது பாரம்பரிய பூர்வகுடி மொழியில் பேசுவது மற்றும் தமது கலாச்சாரப்படி நடனமாடுவது ஆகியவை தடை செய்யப்பட்டன என்றும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வலிந்து வற்புறுத்தப்பட்டனர் என்று கூறியுள்ளனர்.
கனேடிய சமூகத்தில் இணைக்கப்படும் செயல் என்ற நடவடிக்கையின் கீழ் 150,000 குழந்தைகள் அந்த கட்டமைப்பை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஏராளமானோர் தமது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பூர்வகுடி பெயர்கள் நீக்கப்பட்டு புதிதாக ஐரோப்பியப் பெயர்கள் சூட்டப்பட்டனர். அவர்கள் வலிந்து கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர்.
கத்தோலிக்க திருச்சபையின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு, ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாயினர். அதன் காரணமாக அப்படியான பாடசாலைகளில் இருந்த 6000 மாணவ மாணவியர் உயிரிழந்தனர்.
கத்தோகிக்க திருச்சபையின் பள்ளிகளுக்கு வலிந்து கொண்டு செல்லப்பட்ட பூர்வகுடி மாணவர்கள் உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகினர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயினர் என்று இது குறித்த விசாரணை ஆணையம் தமது அறிக்கையில் கூறியுள்ளது.
மன்னிப்பே மருந்து
ஆனால் உறைவிட பள்ளிகளில் நடைபெற்ற விஷயங்களுக்கு போப் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோர முடியாது என்று கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு கூறுகிறது.
“அந்த மன்னிப்பு இன்றுவரை வெளியாகவில்லை என்பது வெட்கக் கேடானது என்று நான் கருதுகிறேன்“ என்று பூர்வகுடி மக்கள் சேவைக்கான அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். பூர்வகுடி மக்களின் நல்வாழ்வுக்கான மற்றொரு அமைச்சரான கேரலைன் பென்னட் அம்மையார் “போப்பின் மன்னிப்பு கோரல் காயங்களை ஆற்றுப்படுத்த உதவும்“ என்கிறார்.
“போப் மன்னிப்பு கோருவதை நாங்கள் கேட்க வேண்டும்“ என்று வலியுறுத்துகிறார் கேரலைன் பென்னட் அம்மையார்.
கத்தோலிக்க திருச்சபையில் பல புரட்சிகரமான மாறுதல்களை கொண்டுவந்தவர் போப் பிரான்சிஸ். அவர்கள் `மக்களின் திருத்தந்தை` என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
மன்னிப்பு கோருவது மற்றும் மன்னிப்பது குறித்து பல விரிவான விளக்கங்களை அவர் அளித்துள்ளார்.
ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு மன்னிப்பு கோருவாரா என்பது தான் கேள்வி?