தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்ததால் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டதாலும், பல வாரங்களாக நாடு முழுமையாக முடக்கப்பட்டு இருப்பதாலும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றிப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சித்திரைப் புத்தாண்டு தினத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021) நல்லூர் அரசடி, திருநெல்வேலி பிள்ளையார் வீதி, அரியாலை இராஜேஸ்வரி வீதி, கொக்குவில் கிழக்கு காளி கோவிலடி, உரும்பிராய் பழைய ஆஸ்பத்திரி வீதி, உரும்பிராய் பூதனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலுள்ள 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.