மொன்றியால் வீணைமைந்தன்
சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இயற்கையெற்திய பொறியியல் கலாநிதி த. வசந்தகுமார் அவர்களின் நினைவாக எழுதப்பெற்ற ஆக்கம் இது – பிரதம ஆசிரியர்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என ஐயன் வள்ளுவப் பெருமான் எழுதிச் சென்றதைப் போல, தம்மைவிடத் தம்முடைய மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் பயப்பதாகும் என கலாநிதி வசந்தகுமார் அவர்களின் பத்து வயதே நிரம்பாத அவரது புதல்வியின் சொல்வீச்சு மன்றத்தில் குழுமியிருந்த அவைனவரையும் பரவசம் கொள்ள வைத்தது.
ஆம்! தொன்னூறுகளின் ஆரம்பத்தில் என்னால் ஆரம்பிக்கப்பெற்ற ‘மொன்றியால் – கனடா கலாச்சாரச் சங்கம்’ தனது வருடாந்த வாணி விழாவை முன்னிட்டு நடத்திய மொன்றியால் – ரொறன்ரோ – ஒட்டாவா ஆகிய நகரங்களில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கான சொல்லரங்கப் போட்டிகளை அறிமுகம் செய்து உற்சாக மூட்டிய காலமது!. ஆண்டுதோறும் எங்கள் ‘கலாநிதி’ அவர்கள் தனது புதல்வியை இப்போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பதற்கு தவறாது மொன்றியால் நகருக்கு அழைத்து வருவார்.
இவ்வாறு தான் எனக்கும் அவருக்குமான தோழமை ஆரம்பித்து வளரத் தொடங்கியது.
உடுப்பிட்டி வாழ் ஆசிரியர்களான தம்பிராஜா தம்பதியின் சான்றோனாகப் பிறந்த கலாநிதி வசந்தகுமார் அவர்கள் வடமராட்சியில் வசந்தமென வீசி வந்த ‘வானவில்’ நாயகன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் ‘கசடறக் கற்ற கல்வியாளன்’
கனடாவில் தந்தையார் தம்பிராஜாவின் முதல் மூன்று எழுத்துக்களால் கனடியத் தோழர்கள் மத்தியில் TAM என மிளிர்ந்த அன்புத் தோழர் வசந்தன் அவர்களை எந்த கோணத்தில் வியந்து பாராட்டுவது என்பது சிரமாமாகவே தெரிகின்றது
‘சேக்கம்’ அமைப்பாலே மக்களைச் சேர்த்து வைத்து, முதியோர்களுக்காக ஆண்டுதோறும் சோர்வகற்றும் நிகழ்வுகள். நோக்கம் இது புதிது என எமது எழுத்தாளர் இணையத்தை கௌரவவித்தும் ஊக்குவித்தும் நின்ற முதல் தமிழ்க் கனேடியர் வசந்தனின் நற்பண்பு மறப்போமா நாங்கள்?
என்றும் இனியவர் என்றும் புதியவர்
என்றும் அஞ்சாதவர் என்றும் இளையவர்
என்றும் எளிமையிவர் என்றும் தமிழரிவர்
கனடியத் தமிழர்க்கு முன்னோடி மின்னறிஞர்
நன்றாகத் தமிழ் பேசி நல்ல சேதி சொல்லிடுவார்
பண்பு மிகு தமிழ் மகனாய் பாரதியின் சீடரிவர்
‘வானவில்’ வண்ணம் போல் ஏழிசை இரசிகனாய்
இசைக் கலாமன்றத்தின் இனிய தோழரிவர்
கொம்பியூரெக்’ கலாசாலையின் மேன்மை மிகு நிறுவனர்
கணணித்துறை உயர் ஆசான் கனிவு மிகக் கொண்டவர்
பன்நாட்டு மாணவர்க்கு துரோணராய்ச் சிறந்த மகான்
எந்நாடு சென்றாலும் சிகரம் தொடுகின்ற அறிவியற் பெருமகன்
கலைத் தொண்டு திருத்தொண்டு தணியாத பொதுத் தொண்டு
கல்விச் சாலைகளில், தொழிற் கூடங்களில் தொலைக் காட்சி ஊடகத்தில்
பேச்சுரையால் சமூகத்தை நெறிப்படுத்தும் வல்லோன்
மருத்துவச் சாலைக்கு மனமுவந்து நிதி வழங்கி நின்று
மத இணக்க வழிபாட்டில் மனமொன்றி இறைத் தொண்டு
தமிழர் வர்த்தக சம்மேளனம் வளர்ந்திட ஒரு தூணாய் நின்று..
எத்தனைத் தளங்களில் தன் முகம் காட்டி மகிழ்ந்தவர்
கன்றனைய பசுவினைப் போல் கருணை முகம்
காண்பதற்கு என்ன தவம் செய்தோமோ
காகிதத்தில் அச்செழுத்தில் புதினங்கள் தருவோர்க்கு
மோகித்துப் பொருள் தந்து
காலத்தால் பெற்ற புகழ் நிலமிசை நீடுவாழும்!
‘பாமரர்க்கும் கணணி’ யெனக் கல்வியைப் புகட்டி வைத்து
இன மத பேதமின்றி எல்லோர்க்கும் இந்நாட்டில் இருப்பிற்கு
வளம் சேர்க்க வழி சமைத்து
சாமரை வீசி நிற்க சரஸ்வதி மகள் ஆனார்
தாமரைச் செல்வியிடம் சரண் புகுந்த
மாணாக்கன் வசந்தகுமார் புகழ் வாழியவே!
அறமுடைத்த இல்வாழ்வும் புறம் சொல்லாக் குணவியல்பும்
திறம் படைத்த தமிழ் நாவும் கருவினிலே திருவுடைத்த
கார்மேகக் கண்ணனை நினைவூட்டும் கணணியாளன்
கனடியத் தமிழறிஞன் புகழ்பாடி விடை கொடுப்போம்
வான்வெளியில் ‘வானவில் தோன்றுங்கால் நம் வசந்தனும்
அங்கொரு வண்ணமென எந்நாளும் எம்முன்னே விளங்கிடுவார்