தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்..
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை இலங்கை நேரப்படி 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவும் சுகாதார நடைமுறைகளைக் கவனத்தில் எடுத்து வண்ணம் ஒரு தனியாரின் இல்லத்தின் முற்றத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கும் அறிவிக்கப்பெற்று அவர்களும் அங்கு சென்று விபரங்களைச் சேகரித்து செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பலரின் உறவினர்களே திருச்சி முகாம்களில் உண்ணாவிரம் இருப்பதாகவும், எனவே அவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.