மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கீரி பகுதியில் அமைந்துள்ள அன்பு சகோதரர் இல்லத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் திருட்டுச் சம்பவத்தை கண்டித்து குறித்த இல்லத்தில் உள்ள சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை (15) மாலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இல்லத்தின் தேவைக்காக குறித்த இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தடவைகள் சுமார் 20 கோழிகள் வரை திருடிச் செல்லப்பட்டுள்ளதோடு, சிறுவர்களின் பயண்பாட்டிற்கு என இருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த அன்பு சகோதரர் இல்லம் மன்னாரில் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருவதோடு, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுவர்களை பராமறித்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இல்லத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் திருட்டுச் சம்பவத்தினால் குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்களும், இல்ல நிர்வாகத்தினரும் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.