இலங்கையின் மாகாண சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் இயங்கி வந்த ஒன்பது பொது மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்க்கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் நான்கு பொது மருத்துவமனைகளும் அடங்கும். அரசியலமைப்பு மாற்றம், கொரோனாப் பேரிடர் போன்றவற்றைக் காரணங்காட்டி மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தாது பிற்போட்டுவரும் அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாகவே அதற்குரிய அதிகாரங்களைப் பறித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாவட்டப் பொதுமருத்துவமனைகளை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்கும் சுகாதார அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் மாகாணசபை முறைமை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசு இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட தொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இது ஒருபோதும் தீர்வாகாது என்றபோதும் இதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கருதி தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப்புறந்தள்ளி மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூடத் தோலிருக்கச் சுளை பிடுங்கும் கதையாகப் பேரினவாத அரசாங்கம் பறித்து வருகிறது.
மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பிரதேசசெயலர்களை மத்திய அரசின் மாவட்டச் செயலகங்களுக்குள் உள்ளீர்த்த அரசாங்கம், பின்னர் கமநல சேவைகள் திணைக்களத்தையும் பறித்துக்கொண்டது. இன்று வடக்கு மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்கள் எதிலும் மாகாண நிர்வாகம் நேரடியாகத் தூர்வாரவோ அபிவிருத்திகளை மேற்கொள்ளவோ இயலாது. மாகாணத்துக்கென்று எஞ்சியுள்ள பெருங்குளங்கள் சிலவற்றையும் மாகாணங்களுக்கு இடையில் நீரைப் பங்கிடுதல் என்ற செயற்றிட்டத்தின் மூலம் பறிப்பதற்கான பாசனத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கு என்ற செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 25 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக்கிய அரசாங்கம் தற்போது அடுத்தகட்டமாக 32 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக மாற்றும் நோக்குடன் அடையாளப்படுத்தியுள்ளது. வடக்குக் கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பறிகொடுப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அது அவர்களது அரசாங்கமே.
மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்குத் தாரைவார்ப்பதில் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் துணைபோவது பெருஞ்சோகம். மாகாண நிர்வாகத்துக்கு மத்தியிடமிருந்து மென்மேலும் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்துப் பலப்படுத்த வேண்டிய இவர்கள் மாகாணத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்தூதுபவர்களாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தேசியப் பற்றுறுதியுடன் இயங்கும் அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தின் கரவான இந்த முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.