நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 17:
மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபற்றும் இயங்கலை ஊடான பேச்சுப் போட்டி, கனடாவின் முதன்மை வார ஏடாகவும் இணைய ஏடாகவும் ஒருசேர பவனி வருகின்ற உதயனின் ஏற்பாட்டு ஆதரவில் 27-06-2021 ஞாயிறு மாலை மலேசிய நேரம் 7:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
இதன் தொடர்பில் சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த பாடகரும் தொழில்முனை-வருமான ராஜா, அதே வட்டாரம் பத்து ஆராங்கைச் சேர்ந்த துங்கு அப்துல் ரகுமான் இடைநிலைப் பள்ளி மேநாள் துணை முதல்வரும் மலேசியத் தேர்வு வாரிய முன்னாள் அதிகாரியும் இடைநிலைப் பள்ளி மாணாக்கர்களின் தமிழ்-தமிழிலக்கியப் பாட பயிற்றுநருமான இராஜேந்திரம் பெருமாள் அவர்கள் ஆகிய இருவரும் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதற்காக கெடா, பகாங், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து ஒரு மாணவர் வீதம் ஐந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலும் உட்புறப் பகுதி அல்லது தோட்டப்புற மாணவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் ஐந்து மாணவர்தம் பெற்றோரும் இசைவு தெரிவித்துவிட்டதாகவும் திருவாளர்கள் ரவாங் ராஜாவும் இராஜேந்திரமும் தெரிவித்தனர்.
உதயன் இதழின் பிரதம ஆசிரியரும் நீண்ட கால பத்திரிகையாளருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள் அறிமுக உரையாற்றி தொடக்கி வைக்கவுள்ள இந்த ‘மலேசிய மாணவர் குரல்’ என்னும் நிகழ்ச்சியில் முதல் பங்கேற்பாளராக கோல கெட்டில், மலாக்கோஃப் தோட்ட தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவி கீதா சண்முகமும், அடுத்ததாக லஞ்சாங் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணாக்கர் மதேஷ் ராவ் சம்பமூர்த்தியும் மூன்றாவது போட்டியாளராக கோல சிலாங்கூர் ராஜ மூசா தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி அஷ்வினா சந்திரசேகரும் நான்காவதாக உலு பேராக் கெரிக் எஸ்.கே.கே. தமிழ்ப் பள்ளி மாணவர் சூர்யா கண்ணனும் ஐந்தாவதும் நிறைவுப் போட்டியாளராகவும் போர்ட் டிக்சன் தானா மேரா தமிழ்ப் பள்ளி மாணவி கிசாலினி பாலமுருகனும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ஏறக்குறைய கடந்த 15 மாதங்களாக, கொரோனா நச்சில் பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, இணையவழி வகுப்புகளின் மூலமே பாடங்களுக்கான பயிற்று நடவடிக்கை நடைபெற்று வருவதை உலகெங்கும் பார்க்க முடிகிறது. அதற்கேற்ப மலேசிய மாணவர்களும் குறிப்பாக தமிழ்ப் பள்ளி மாணவர்களும் இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்களும் தங்களை தக அமைத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த இராஜேந்திரம், தமிழ் மாணவர்கள் பலதரப்பட்ட போட்டிகளில் கலந்து வெற்றியும் பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
ஆனாலும், நகர்ப்புற மாணவர்களுக்கே பெரும்பாலன வாய்ப்பு கிட்டுவதால், கனடா உதயன் இதழின் ஏற்பாட்டு ஆதரவில் நடைபெறவுள்ள இந்த நாவன்மைப் போட்டியில் கலந்து கொள்ள தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் ஆசிரியரான இராஜேந்திரம் விளக்கம் அளித்தார்.
‘கொரோனா கால கட்டத்தில் என் கல்வி அனுபவம்’ என்னும் தலைப்பில் ஐந்து மாணவர்களும் 7 நிமிடங்களுக்கு உரையாற்றுவர். மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்தம் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுத் தமிழ் ஊடக ஆதரவில் நடைபெறும் நிகழ்ச்சியாக இது அமையும் என்று நிகழ்ச்சி நடத்துனருமான இரேஜேந்திரம் பெருமையாகக் குறிப்பிட்டார்.
கனடா, டொரொண்டோ பெருநகரில் வாழும் புலம்பெயர் தமிழர்தம் கரங்களில் வெள்ளிக்கிழமை தோறும் தவழும் முன்னிலை வார இதழாகவும் உலகத் தமிழர்களை இமைப்பொழுது தோறும் பிணைக்கும் இணைய ஏடாகவும் பவனி வரும் உதயனையும் மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களையும் இணைக்கின்ற இந்த மாணவர் குரல் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று பெரும்பங்காற்றி வரும் பாடகர் ராஜா, சம்பந்தப்பட்ட ஐந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான திருமதி மு.உதயமலர், திரு. க. மோகனராஜ், திரு. செ. பாண்டியன், ஜெ. பாலச்சந்திரன், திரு.கோ. மோகன் ஆகிய ஐவரும் வழங்கிய ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் நிலை, 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின், ஏனைய இருவருக்கும் ஆறுதல் பரிசு என அனைவருக்கும் பணப் பரிசு அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஆதரவு நிறுவனமான உதயன் இதழின் பிரதம ஆசிரியரும் தெரிவித்துள்ளனர்.