கலாநிதி வசந்தகுமார் அவர்கள் உடுப்பிட்டியில் மிக்ச சிறந்த ஆசிரியர் என்ப பெயர் எடுத்து அவர்களின் மாணவர்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் எங்கள் மதிப்புக்குரிய தம்பிராஜா ஆசிரியரின் மகன் என்ற பெருமையுடன் அவரது வழியைப் பின்பற்றி சமுகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்த கலாநிதி வசந்தகுமார் அவர்கள் 14.06.2021 அன்று கனடா மண்ணிலே காலமாகிவிட்டார் என்ற செய்தி தாயக மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபொழுது, எமது கல்லூரி கல்வித்துறையில் மட்டுமல்லாது “13 ஆவது யாழ்ப்பாணம்” என்ற அடையாளத்துடன் சாரணிய இயக்கம் இலங்கை முழுவதும் கொடிகட்டிப் பறந்தது. அப்பொழுது நானும், வசந்தனும் பழகிய உறவு கனடாவில் எனது மகனைச் சந்தித்த அந்த நாளையும் தொடர்ந்து இன்றுவரை நீடித்தது.
வசந்தகுமார் கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கல்வியில் மிக உன்னத நிலையில் இருந்து தனது பெயரைப் பதித்துக் கொண்டாலும் நாடகங்கள் நடிப்பதிலும், விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்ததிலும் உன்னதமான ஒரு மாணவராக இருந்து தனக்கென ஒரு ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் வகுப்பில் எப்பொழுதும் முதல் மாணவனாகவே இருந்து மற்றைய மாணவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் இருந்து அவர்களையும் வளர்த்து வந்தார்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் மட்டுமல்லாது மாவட்ட ரீதியில் இடம்பெற்ற பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி எப்பொழுதுமே முதலாம் இடத்திலேயே இருந்து, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்குப் பெருமைசேர்த்த ஒருவராக இருந்தவர்.
எமது கல்லூரிச் சாரணர்குழு யாழ் மாவட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கலந்துகொண்டு பல சந்தர்ப்பங்களில் “தீவு மட்டத்திலான தகுதிக் கொடியை (Island Merit Flag) வென்றெடுத்ததில் வசந்தகுமாரின் பங்கு அளப்பரியதாக இருந்ததை நாங்கள் மறந்து விடமுடியாது. தம்பிராசா வசந்தகுமார், க.பெ.ர.த. உயர் தரத்தில் கணிதத்துறையில் அதிகூடிய சிற்நத பெறுபேற்றைப் பெற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறிறியியல் பீடத்திற்குத் தெரிவாகி அங்கும் மெறிற் சித்தியைப் பெற்று ஆற்றல் மிக்க ஒரு பொறியியலாளராகத் தன்னைத் தடம் பதித்துக் கொண்டார். தனது கல்வி அறிவு மற்றும் ஆளுமை காரணமாகத் தனது கலாநிதிப் பட்டத்தைப் பொறியியல் துறையில் பெற்றுக்கொண்டமை எங்களுடைய் கல்லூரிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் மேலும் பெருமை சேர்த்தது.
இலங்கையில் சிலகாலம் பணியாற்றிய கலாநிதி தம்பிராசா வசந்தகுமார் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த சென்ற பின்னர் தான் அவருடையை ஆளுமையையும், ஆற்றலையும் உலகமே அறிந்து கொண்டது.
1988 களில் விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் கட்டிடங்கள், ஆவணங்கள், ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கொண்ட நூலகம், ஆய்வு கூடங்கள், தொழில்நுட்பக் கூடங்கள், அதிபர் அலுவலகம் என எலலாமே அழிக்கப்பட்டுத் தரைமட்டமாக இருந்தபொழுது,கல்லூரி அப்படியே அடையாளமே அழிந்துவிடுமோ என்று எல்லோருமே அச்ச்ததுடன் ஏங்கிக் கொண்டிருந்த காலத்தில் கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் ஆசிரியருமாக இருந்த அமரர்.க.சிதம்பரப்பிள்ளை அவர்களைப் புதிய அதிபராகக் கொண்டுவந்து, அவரை வினைத்திறனுடன் செயற்படுத்தும் வகையில் மீண்டும் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும், பழைய மாணவராகவும் இருந்த பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்களைப் பழைய மாணவர்சங்கத்தின் தலைவராக்கியபொழுது அதனை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
அப்பொழுது யுத்தத்தின் கோரப்பிடியில் எமது மண் இருந்தபொழுது, பொருளாதாரத் தடைகள், கல்வி உபகரணங்களை எடுத்து வருவதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கல்லூரி வளர்ச்சிக்கான நிதியும் இல்லாது இருந்தது. அந்தக் காலத்திலேயே அதிர்ஷ்டவசமாக கனடாவில் இருந்த எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களான வசந்தகுமார், சொர்ணலிங்கம் போன்ற ஆற்றல் மிக்க பொறியியலாளர்களையும் ஏனைய பழைய மாணவர்களையும் இணைத்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் கிளையை ஸ்தாபித்து அதனூடாக நிதி சேகரிக்கும் நடவடிக்கையை கலாநிதி வசந்தகுமார் முன்னெடுத்தார். இதற்காகக் கனடாவிலேயே மிகவும் புகழ்பெற்றிருந்த ஒரு கலைநிகழ்ச்சி என்று பெயர் எடுத்த “வானவில்” நிகழ்ச்சியை ஒவ்வொருவருடமும் நடத்தி அதன் மூலம் பல இலட்சக் கணக்கான நிதியைச் சேகரித்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு அனுப்பி வைப்பதில் முன்னின்று உழைத்த ஒரு பெருந்தகையாவார்.
1992 ஆம் அண்டில் இக் கலலூரியின் அதிபராக நான் பொறுப்பேற்ற காலத்தில் கனடா பழையமாணவர் சங்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியில் இருந்தே எமது கல்லூரியை மீண்டும் எல்லாத் துறைகளிலும் கட்டி எழுப்ப ஒரு தூண்டுதலாக இருந்தது. அந்தநேரம் கலாநிதி வசந்தகுமாரும் அவரது நண்பர்களும் எங்களின் கல்லூரிக்கு வழங்கிய பெருமளவு நிதியே கல்லூரியை மீண்டும் முதல் நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. அந்தவகையில் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களின் தன்னலமற்ற உழைப்பு இருந்தது.
கனடாவில் அவர் வாழ்ந்த காலத்தில், தனது சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியதை விட தாயகத்திலும், கனடாவிலும் வாழும் தமிழர்களின் கல்வி, கலை, பண்பாடு, பொருளாதாரம் போன்ற ஒவ்வொரு துறைகளிலும் தமிழர்கள் சிறந்தோங்க வேண்டுமென்பதற்காக பல்வேறு வகைகளிலும் அயராது உழைத்த ஒரு உன்னதமான மனிதராகத் திகழ்ந்தார். குறிப்பாகக் கனேடியத் தமிழ் வர்த்தக சம்மேளனத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டதுடன், தேவையான நிதிப்பங்களிப்பையும் வழங்கி, கனேடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் வளர்ச்சியில் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கட்டி எழுப்பவும் காரணமாக இருந்தவர். அதேவேளை கொம்பியூற்றெக் கல்லூரி (Computec College) என்ற கல்விநிறுவனத்தை உருவாக்கி அதன் மீதான நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையை வளர்த்து அடுத்த தலைமுறையிடம் கையளித்து தமிழ் வர்த்கர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
வர்த்தகத் துறையிலும், தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் காட்டிய அதீதமான அக்கறையைப் போன்று கனேடியக் கலைத்துறையிலும், கல்வித் துறையிலும் அவர்காட்டிய அக்கறையும் செயற்பாடும் மிக உன்னதமானது. கனேடியத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் வினாடி வினா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வாரம்தோறும் நடத்திய நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ்த்தொலைக்காட்சி நேயர்களிடம் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருந்த வசந்தகுமார், தான் ஒரு பொறியியலாளர் என்பதற்கும் மேலாகப் பல்துறை ஆற்றல் உள்ளவராகத் தன்னை இனங்காட்டி இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
கனேடிய மண்ணில் தனது சேவையின் காரணமாக சிறந்த பொருளியல் நிபுணர் என்ற வகையில் கனேடிய வர்த்தக சம்மேளனம் அவருக்கு விருது வழங்கிக் கௌரவித்தது காலம் அறிந்து செய்த ஒரு பணியாகும் அதே வேளை வருடா வருடம் இகுருவி நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் இகுருவி இரவு நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொழுது, அதனைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மற்றவர்களின் அற்றல்களை மனம் திறந்து பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் நல்லமனம் படைத்த கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை எங்களால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியவில்லை….. இன்றும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக்கொண்டு முதலில் எங்களை நாங்களே ஆறுதல் படுத்திக்கொள்வோம்.
அவரது பிரிவு தாயகத்தில் உள்ள எங்கள் கல்விச் சமுகத்திற்கும், கனேடியத் தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்ட ஈடுசெய்யப்பட முடியாத மிகப்பெரும் இழப்பு. அன்னார் தமிழ் சமூகத்திற்கான ஆணிவேர்களில் ஒருவராக சமூக ஆர்வலராக ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. அவற்றை யார் இனிமேல் தொடரப் போகின்றார்கள் என்பதை நினைக்கும் பொழுது அங்கே ஒருவெறுமைதான் தெரிகின்றது….!
அன்னாரது பிரிவில் துயருறும் அவரது மனைவி மற்றும் குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் சார்பிலும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பிலும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
வல்வை.ந.அனந்தராஜ்
முன்னாள் அதிபர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
துணைத்தலைவர், பழைய மாணவர் சங்கம்