(மன்னார் நிருபர்)
(17-06-2021)
மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று புதன் கிழமை (16) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல்; தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார், மடுத்திருத்தலத்தின் பரி பாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் மற்றும் உதவி அரசாங்க அதிபர் , திணைக்கள தலைவர்கள் , பொலிஸ் உயர் அதிகாரிகள் , சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக மடு திருவிழா வழமை போல் இடம ;பெற்றாலும் யாத்திரிகர்கள் செல்வது தவிர்கப்பட்டுள்ள நிலையில் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், குறித்த திரு விழாவிற்கான முன்னேற்பாடுகள் , சுகாதார நடைமுறைகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உரிய திணைக்களங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா வழமைபோன்று இடம் பெற்றாலும் யாத்திரிகர்கள் திருவிழா திருப்பலியில் பங்குபற்ற முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவிழாத் திருப்பலி எதிர் வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி காலை 6:15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்களினால் கூட்டுத் திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்பட உள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மேலும் பல திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது.
இதில் மன்னார் மறைமாவட்ட பகுதிகளிலுள்ள குறிக்கப்பட்ட 30 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு,வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.