அண்மை வாரங்களில் அமெரிக்க கொங்கிரஸ் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சில நகர்வுகள் ஈழத் தமிழர்களுக்கு உற்சாகமளிப்பவைகளாகவும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பவைகளாகவும் காணப்படுகின்றன.
கடந்த மாதம் 18ஆம் திகதி அமெரிக்க கொங்கிரஸில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு தீர்மானமான முன்மொழிவானது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதியை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இத்தீர்மானம் அமெரிக்க கொங்கிரசிலும் செனற்றிலும் இனிமேல்தான் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதேசமயம் ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்தீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவது, மீளாய்வு செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான புதிய சட்டத்தினை அல்லது திருத்தப்பட்ட சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே 2017இல் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இலங்கை மீளப்பெற்றுக் கொண்டது என்பதும் அத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போது அந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுதாமையினால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை பற்றி மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 40உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
மேற்குநாடுகளால் முன்னெடுக்கபட்டிருக்கும் மேற்படி நகர்வுகள் இரண்டும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கிலானவை. ஜிபிஎஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது இலங்கை தீவின் பொருளாதாரத்தை நேரடியாகத் தாக்கும். ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் நாடு கொரோனா வைரஸ் தாக்கத்தால் புதிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை காரணமாக இந்தியா ஏற்கனவே வாக்குறுதியளித்த கடன் உதவிகளை வழங்கப் பின்னடிப்பதாக அவதானிக்கப்படுகின்றது. தவிர இலங்கைத்தீவு நடுத்தர வருமானத்தை பெறும் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதனால் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடமும் பொருத்தமான உதவிகளை பெற முடியாது. இவ்வாறானதொரு நிலைமையில் தான் அண்மையில் இலங்கை அரசாங்கம் பங்களாதேஸிடம் கடன் பெற்றிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடுதான் பங்காளதேஷ்.கடந்த 40 ஆண்டுகளில் அது கடன் வாங்கும் நாடு என்ற நிலையிலிருந்து கடன் வழங்கும் நாடாக எழுச்சி பெற்றிருக்கிறது. இலங்கைத் தீவு பங்களாதேஸிடம் கடன் வாங்க வேண்டிய அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை தீவுக்கான ஜிபிஎஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய நாடாளுமன்றம் நீக்குமாக இருந்தால் நாடு மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறு மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சில நகர்வுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ள ஒர் அனைத்துலக பின்னணியில்தான் இந்த மாதம் 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என்று செய்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மோசமாக தோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்துக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படக்கூடும் என்ற ஊகம் கடந்த 10 மாதங்களாக நிலவி வந்தது. இப்பொழுது கட்சியின் செயற்குழு அவரை நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தேர்தல் தோல்வியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அமைதியாக காணப்பட்டார். தோல்வியுற்ற கையோடு உடனடியாக தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய அவர் விரும்பவில்லை. தன்னுடைய காலம் வரும்வரையிலும் அவர் காத்திருந்தார் என்றே கருத வேண்டும்.
கடந்த 10 மாதங்களாக சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சஜித் பிரேமதாச தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் அவருடைய சொந்தக் கட்சிக்குள் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகள். இரண்டாவது காரணம்- ராஜபக்சக்க்கள் அசுர பலத்துடன் வெற்றி பெற்றிருக்கும் ஒரு நாடாளுமன்றத்தில் அவர் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்கு இக்குறுகிய காலகட்டம் போதாது என்பது. மூன்றாவது காரணம்- covid-19 நெருக்கடி. கொரோனா வைரசும் சஜித்துக்கு சாதகமாக இல்லை.நாட்டின் அரசியலை அது கணிசமான அளவுக்கு முடக்கி வைத்திருகிறது. எதிர்க் கட்சிகள் தமது எதிர்ப்பைக் காட்டச் சனங்களைத் திரட்டி வீதியில் இறக்க முடியாத நிலை. நாலாவது காரணம்-ராஜபக்சக்களின் யுத்த வெற்றி வாதத்துக்கு எதிராக சஜித்தின் அரசியல் நின்றுபிடிக்க முடியவில்லை என்பது.
மேற்சொன்ன காரணங்களின் விளைவாக சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவத்தை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கவர்ச்சியான விதத்தில் ஸ்தாபிக்கத் தவறி விட்டார். இதற்காகத் தான் ரணில் விக்கிரமசிங்க காத்திருந்தார் போலும். இப்பொழுது தனக்கு உரிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கருதக்கூடும். அவர் மட்டுமல்ல அவருடைய எஜமானர்களான மேற்கு நாடுகளும் அவ்வாறு கருத முடியும். யுத்தவெற்றி வாதத்தைத் தோற்கடிப்பதென்றால் அதற்கு மூன்று இன வாக்குகளையும் திரட்ட வேண்டும். அதுதான் 2015இல் நடந்தது. அவ்வாறு மூன்று இனங்களையும் ஒன்று திரட்ட வல்ல ஒரே தலைவராக ரணிலைத்தான் மேற்கு நாடுகள் பார்கின்றன.
ஆனால்,கடந்த 10 மாதங்களாக சஜித் பிரேமதாச மட்டுமல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் யாருமே தலையெடுக்க முடியாதபடி நாடு பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா நெருக்கடி போன்றவற்றில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்குள் நுழைவதன் மூலம் உடனடிக்கு சஜித்தை மேலும் பலவீனப்படுத்துவதைத் தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால் நீண்ட எதிர்காலத்தில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விளையும் மேற்கு நாடுகளின் கருவியாக அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் இறக்கப்பட்டிருக்கிறாரா என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சியை விட இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது இலங்கை தீவு அதிகரித்த அளவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு சீனமயப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெச்சரிக்கையோடு பார்க்கின்றன. இது காரணமாக ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சியை ஓர் ஆட்சி மாற்றத்தின் மூலம் கவிழ்த்ததை போல இம்முறையும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று அவர்கள் சிந்திக்கக்கூடும். ஆனால் இங்குள்ள அடிப்படை பிரச்சினை என்னவென்றால் எவ்வளவுக்கு எவ்வளவு மேற்கு நாடுகளும் இந்தியாவும் ராஜபக்சக்களை இறுக்கிப் பிடிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி போகக்கூடிய ஆபத்தும் உண்டு என்பதுதான். இலங்கை தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.சீனா போன்ற பெரிய நாடுகள் அதன் கடன் சுமையை இலகுவாக தீர்த்துவிடலாம். எனவே மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிகம் அழுத்தத்தைப் பிரயோகித்தால் அரசாங்கம் சீனாவை நோக்கி மேலும் போகக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன.
ஜிபிஎஸ் வரிச்சலுகை தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்குப்பின் இலங்கை அரசாங்கம் சில தற்காப்பு சுதாரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கென்று ஒரு குழு அமைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். மேலும் அரசாங்கம் கூட்டமைப்போடு பேசப் போவதாக ஒரு செய்தி வெளிவந்தது. எனினும் கடைசி நேரத்தில் அரசாங்கம் அச்சந்திப்பை ரத்துச் செய்தது. இதுபோன்ற சுதாகரிப்புகளின் மூலம் மேற்கு நாடுகளை சமாளிக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்பக்கூடும்.
குறிப்பாக இந்தியாவை சமாதானப்படுத்தினால் அது மேற்கை சுதாகரிப்ப்பதற்கு உதவும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்த தவறியுள்ளது. எனினும் பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியோடு அடுத்த கட்டத்துக்கு புனரமைத்து அந்த விமான நிலையத்தின் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் சில வாரங்களுக்கு முன் சம்மதம் தெரிவித்திருந்தது. வைரஸ் தொற்றைக் காரணமாகக் காட்டி அப்பணிகள் இழுபடுகின்றன. அதைப்போலவே காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் வரையிலுமான படகுச் சேவை தொடர்பிலும் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதற்குரிய ராஜிய வேலைகள் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த புதிதில் இந்தியா முதலில் என்பதே தமது வெளியுறவுக் கொள்கை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஆனால் அது ஒரு கவர்ச்சியான சொல்லாடல் மட்டும்தான் நடைமுறை அல்ல என்பதைத்தான் கடந்த ஓராண்டு காலம் நிரூபித்திருக்கிறது. நடைமுறையில் சீனாவுக்கே முதலிடம் தரப்படுகிறது. அரசாங்கம் இந்தியாவை வாக்குறுதிகளால் மட்டும் சமாளித்து வருகிறதா?
இப்படிபட்டதோர் பின்னணியில் ரணல் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதால் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் அனுகூலமான ஓரரசியற் சூழல் உடனடிக்கு உருவாகுமா அது ராஜபக்சக்களைப் பலவீனப்படுத்துமோ இல்லையோ சஜித்தைப் பலவீனப்படுத்தும் என்றே தெரிகிறது.