மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.
(மன்னார் நிருபர்)
(18-06-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தச் செல்லும் நிலையில் மேலும் புதிதாக 49 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
-நேற்று வியாழன் மாலை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் மேலும் புதிதாக 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவர்களில் 2 தொற்றாளர்கள் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பிரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 17 நபர்கள் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவர்களின் மூவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.மேலும் பணங்கட்டிக்கோட்டு மற்றும் எமில் நபர் பகுதிகளில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 21 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-மேலும் வங்காலை மற்றும் செம்மண் தீவு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 5 நபர்கள் உற்பட மேலும் 2 நபர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளின் போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கையன் குளம் உள்ளிட்ட வவுனியா எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது காக்கையன் குளம் மற்றும் கோமரசன் குளம் பகுதிகளைச் சேர்ந்த 2 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் தற்போது வரை 114 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடம் 604 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் மொத்தமாக 621 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 456 பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்க உள்ளது.மன்னார் மாவட்டத்தில் இயங்குகின்ற ஆடைத் தொழிற்சாலை சுகாதார பிரிவினரின் தொடர் கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
-குறித்த ஆடைத்தொழிற்சாலையில் அன்ரிஜன் பரிசோதனை அவர்களின் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதியில் இருந்து இன்று வரை இவர்களினால் 555 அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 23 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களில் முதல் தொடர்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் பொது மக்களும் ஏனைய தொழிற்சாலை ஊழியர்களும் உரிய சுகாதார விதி முறைகளை பின்பற்றி நடந்து கொள்வதோடு,நோய் அறிகுறிகள் காணப்பட்டால் கடமைக்குச் செல்லாது தவிர்த்துக் கொண்டு வீடுகளில் ஓய்வெடுத்து சுகாதார துறையினருக்கு அறியப்படுத்துங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.