இணையவழி அஞ்சலி நிகழ்வில் தமிழர் வர்த்தக சம்மேளனத் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் புகழாரம்.
“அண்மையில் கனடாவில் இயற்கையெய்திய கலாநதி த. வசந்தகுமார் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் சமூக சேவையாளனாகவும் தனது வாழ்நாளில் விளங்கினார். கனடாவில் அவர் வாழ்ந்த முப்பது வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் விரல் கொண்டு எண்ண முடியாத அமைப்புக்கள், சேவை வழங்கும் ஆகியவற்றோடு தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணியும் கல்விப் பணியும் ஆற்றினார்.
குறிப்பான சமூக நிறுவனங்கள், கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள், பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம், இலங்கை பட்டதாரிகள் சங்கள், ‘சேக்கம்’ அமைப்பு, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆகியவை உட்பட பல அமைப்புக்களில் இவரது பங்களிப்பு தொடர்ச்சியாக இருந்து கொண்டே தனது வாழ்வோடு பயணித்தார். கனடாவில் பல தனிப்பட்டவர்களின் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு செயற்பட்டவராக ‘கலாநிதி’ வசந்தகுமார் அவர்கள், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்ட பெருமனம் படைத்தவராக விளங்கினார்”
இவ்வாறு அண்மையில் கனடாவில் இயற்கையெய்திய கலாநிதி த. வசந்தகுமார் அவர்களின் மறைவையொட்டி கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்வில் இரங்கல் உரையாற்றிய சம்மேளனத்தின் தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கம் தெரிவித்தார்.
திரு குயின்றஸ் துரைசிங்கம் தொகுத்து வழங்கிய இந்த அஞ்சலி நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள்,இயக்குனர் சபை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் உரையாற்றினார்கள்.
அங்கு தொடர்ந்த உரையாற்றிய சாந்தா பஞ்சலிங்கம்
“கனடாவில் 30வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு சொந்தமான ஒரு கட்டடத் தொகுதியை கொள்வனவு செய்யும் எனது விருப்பத்தை நிஜமாக்கியதில் மறைந்த ‘கலாநிதி’ த. வசந்தகுமார் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இதை எமது சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் முன் வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயம்” என்றார்.
அங்கு அஞ்சலியுரையாற்றிய எழுத்தாளர் ‘சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் அவர்கள் தனது இரங்கல் உரையில், “தமிழர் சமூகத்தையும் தமிழ் மொழியையும் தன் இரண்டு கண்களாக நேசித்த ‘வசந்தன்’ அவர்கள் கடனாவில் உள்ள எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் நெருக்கமாக நேசித்து மரியாதை செய்தவர்.;. அவர்களின் ஊடகச் செயற்பாடுகளிலே உறுதுணையாக இருந்தவர்” என்றார.
அங்கு உரையாற்றிய சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் பலர் ‘வசந்தன்’ அவர்களோடு இணைந்து பணியாற்றிய தங்கள் அனுபவங்களைப் மகிழ்ச்சியோடும் உணர்வோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தனது .இரங்கல் உரையில் ‘கலாநிதி’ வசந்தன் அவர்கள் தனது கனடிய வாழ்நாட்களில் ஆற்றிய பணிகள் அவரது இறப்பிற்கு பின்னர் கிடைத்த ஒரு கௌரவமாகவே கருதப்படுகின்றது. இவரை எனக்கு தெரியும் என்று கவலையுடன் தெரிவிக்கும் பல்லாயிரக்கணக்கான எம்மவர்களை நாம் காணுகின்றோம். அவரைப் பற்றிய அஞ்சலிக் கட்டுரைகளை நாம் கேட்காமலே எழுதி அனுப்பிவைத்த அன்பர்கள் தங்கள் எழுத்துக்களை கண்ணீரும் சேர்ந்திருக்க அவருக்காய் படைத்தார்கள்” என்றார்