-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 21:
தமிழர்கள் உடற்பயிற்சியை கைகழுவிவிட்டு, யோகாவை கைக்கொள்கின்றனர்.
திருவள்ளுவர், திருமூலர், இளங்கோ அடிகள் போன்ற ஆன்றோர்-சான்றோர் பெருமக்களின் வாழ்க்கையை முழுதாக அறிந்தவர்கள் யோகக் கலையின் உன்னதத்தை ஓரளவேணும் உணர்வர். நின்ற இடத்திலேயே நிலத்தின் தன்மையையும் நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரின் ஊகிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; கூடு விட்டு கூடு பாயும் நுட்பம்; நாட்கணக்கில் பசியைத் துறத்தல், காற்று-வெம்மை-மழை உள்ளிட்ட வானியக் கூறுகளை வருமுன் உரைத்தல் போன்ற ஆற்றலைப் பெற்றவர்களைத்தான் யோகியர் என்றழைப்பது வழக்கு
அந்த நிலையை எட்டுவதற்கான முயற்சிக்கும் பயிற்சிக்கும் பெயர்தான் யோகக் கலை.
ஆனால், நிகழும் 21-ஆம் நூற்றாண்டில் நின்றபடியும் உட்கார்ந்தபடியும் கை, கால்களை நீட்டுவதும் உடலை வளைப்பதும் யோகா என்றாகி, அதுவே யோகக் கலையாகி, யோகக் கலையின் அருமையும் பெருமையும் அநியாயமாக சுறுங்கி சருகாகிவிட்டது.
இதில், வேதனையான ஒன்று, உடற்பயிற்சி என்னும் கூட்டுச் சொல்லை தமிழர்களை மறந்துவிட்டதுதான்.
அத்துடன் உடற்பயிற்சியையும் மறந்தே விட்டனர். அப்படியே போகிற போக்கில் ஏதாவது மனமகிழ் மன்றம், அல்லது சமூக-பொது அமைப்புகளின் சார்பில் எங்கேயாவது ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைகளையும் கால்களையும் இப்படியும் அப்படியுமென ஆட்டிவிட்டு, “நான் யோகா வகுப்புக்கு சென்று வருகிறேன்” என்று பெருமையாகப் பேசிக் கொள்வது நம்மவருக்கு இப்போது வாடிக்கையாகி விட்டது.
உடற்பயிற்சி என்பது சாதரண நிலையில் மேற்கொள்வது. வேளை வாய்க்கும் பொழுதெல்லாம் உடல் பயிற்சியை மேற்கொண்டால், நம் உடலில் உள்ள எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், சீரண மண்டலம், கழிவு மண்டலம், தோல் மண்டலம் ஆகிய எட்டு மண்டலங்களும் ஒருசேர இயங்கும். அதனால், அட்டியின்றி ஆரோக்கியம் தொற்றிக் கொள்ளும் நம் உடலை. இந்த உடற்பயிற்சியுடன் மூச்சுப் பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சியையும் இணைத்துக் கொண்டால் அது, இன்னும் நன்மையைக் கொண்டு வரும்.
உடற்பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம். ஆனால், மூச்சு(சுவாச)ப் பயிற்சியை உட்கார்ந்துதான் செய்ய வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்வோருக்கு சுவாச மண்டலம் செம்மையடையும். மூக்கு, மூச்சுக் குழல், நுரையீரல், இதயம் உள்ளிட்ட சுவாச மண்டலம் நன்கு இயங்குவதால் மூச்சடைப்பு, இதயக்கோளாறு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் அண்டவே அண்டாது. அத்துடன், உள்ளத்திற்கு புத்துணர்ச்சியையும் உடலுக்கு உற்சாகத்தையும் தர வல்லது இந்த சுவாசப் பயிற்சி.
இத்தகைய சுவாசப் பயிற்சியை(உட்கார்ந்து கொண்டு செய்வதால்) ஆசனப் பயிற்சி என்றும் அழைத்தனர் நம் முன்னோர். இந்த ஆசனப் பயிற்சி, உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மையை, அதாவது யோகத்தைக் கொண்டு வருவதால் யோக ஆசனப் பயிற்சி என்று காலப்போக்கில் அழைக்க ஆரம்பத்தனர். யோகம் என்றால் நன்மைதான்.
யோகம் என்னும் சமஸ்கிருத சொல்லை தியானத்துடன் இணைத்து சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல சமயங்களிலும் பலவாறாக புனைந்து எழுதப்பட்டுள்ளன. சமய இலக்கியங்களில் யோகம் என்பதற்கு இதுதான் பொருள் என்றில்லாமல், ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக மனம்போன போக்கில் எழுதிக் கொண்டுள்ளனர்.
ஆனால், உடற்பயிற்சியை இடம்பெயரச் செய்துவிட்டு அந்த இடத்தில் யோகா என்னும் சமஸ்கிருத சொல் ஒட்டிக் கொண்டதற்கு யோக ஆசனம்தான் காரணம். மாறாக, தமிழர் வாழ்விலும் தமிழ் மொழியிலும் யோகா என்பதற்கு அறவே இடமில்லை.
யோக ஆசனப் பயிற்சியில் ஒரு கட்டுப்பாடு, வரம்பெல்லாம் இல்லை. இதில் ஐந்து பெரும்பிரிவுகள் உள்ளன என்கின்றனர் சிலர்; இன்னும் சிலர், பதினைந்து பிரிவுகள் உள்ளதாக உரைக்கின்றனர்; மற்றும் சிலரோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை; யோக ஆசனத்தில் உள்ளது பன்னிரண்டு பிரிவுகள்” என்கின்றனர். எது எவ்வாறாயினும், பிரிவுகள் எத்தனை யாயினும் நின்ற பாத ஆசனம், பதமாசனம், வீராசனம், சிரசாசனம், யோகமுத்ரா, மயூராசனம், பிறையாசனம், பாதசுத்தாசனம், திரிகோண ஆசனம், சக்கர ஆசனம், மிருக ஆசனம், நடராச ஆசனம், பிராண ஆசனம், கவையாசனம், பூர்ண நவ ஆசனம் என்றெல்லாம் ஏறக்குறைய அறுபது ஆசன முறைகள் உள்ளன. மொத்தத்தில் உடற்பயிற்சி தவிர, மூச்சுப் பயிற்சி அல்லது ஆசனப் பயிற்சி அல்லது யோக ஆசனப் பயிற்சி என்பதில் ‘யோகா”-வை மட்டும் நாம் கெட்டியாகப் பற்றிக் கொண்டோம்.
இந்த யோக ஆசனப் பயிற்சியைப் பற்றித்தான் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெரிதாக முழங்கினார். அந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் 27-ஆம் நாளில் ஐநா மன்றத்தில் பேசிய மோடி, யோகாசனத்தை(மூச்சுப்பயிற்சியை)ப் பற்றி வானளாவ புகழ்ந்து பேசினார்.
மூச்சுப் பயிற்சி அல்லது ஆசனப் பயிற்சியைப் பற்றி(யோகாசனம்), பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நம் சான்றோர்களும் ஆன்றோர்களும் நமக்கு சொல்லியுள்ளனர். உலக இலக்கிய மேடையில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்தித் தந்த திருவள்ளுவப் பெருந்தகை, பெரிய புராணம் என்னும் சமய இலக்கியத்தைப் படைத்த சேக்கிழார் பிரான், ஏறக்குறைய 18 நூற்றாண்டுகளுக்கு முன் சோழ, பாண்டிய, சேர நாடுகளை இணைத்து தமிழியத் தொன்மையை நிலைநாட்டும் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள் போன்றோரெல்லாம் இந்த யோகக் கலையில் சிறந்து விளங்கியவர்கள். அதீதமான மூச்சுப் பயிற்சியுடன் மனவளக் கலையையும் பயின்று சித்தர்களாக வாழ்ந்த ஏராளமானோரை தமிழ் வரலாறு நெடுகக் காணமுடியும்.
பழந்தமிழ்ச் சமூகத்தில் 64 கலைகளை அறிந்தவர்களுக்கு அகத்தியர் என்னும் பட்டம் அளிக்கப்படுவதுண்டு; அந்த வகையில் தொன்மையான தமிழ்ச் சமுதாயத்தில் 33 அகத்தியர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்றனர். அதைப்போல 64 கலைகளை அறிந்த பெண்களுக்கு ஔவையார் என்னும் பட்டத்தைச் சூட்டி சிறப்பித்தனர். ஆனாலும், நாம் அறிந்த தெல்லாம் ஆத்திச் சூடியை இயற்றிய ஓர் ஔவையாரை மட்டும்தான். மொத்தத்தில், இப்படி 64 கலைகளை அறிந்தவர்கள் பெரும்பாலும் சித்தர்களாகவும் யோகக் கலை வல்லுநர்களாகவும் விளங்கினர்.
எதிரியை ஒரே அடியில் முடங்க வைத்தல், அப்படி முடங்கி முடக்குவாதம் கண்டவர்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருதல், போர்க்கலை, கவி புனைதல், சித்த மருத்துவம், நாட்கணக்கில் உணவின்றி, நீரின்றி தியான நிலையில் ஆழ்ந்திருந்தல், ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) கசப்பான உணவை மட்டும் உண்டு நாகப் பாம்பு, கட்டு விரியன், கொடிய குளவி போன்ற நச்சு உயிரிகளின் கொடிய நஞ்சை எதிர்க்கும் ஆற்றலை உடலில் கொண்டிருத்தல் ஆகியத் தன்மைகளைப் பயிற்றுவிக்கும் குருகுல வகுப்பிற்கு சென்று வந்த அக்கால மாணவர்கள்கூட, “நான் யோக வகுப்பிற்கு செல்கிறேன்” என்று சொன்னதில்லை.
ஆனால், வெறுமனே உட்கார்ந்து எழுந்துவிட்டு, கைகளையும் கால்கலையும் கொஞ்சம் ஆட்டி அசைத்துவிட்டு, சிறதளவு சுவாசப் பயிற்சியை முடித்துக் கொண்டு “நான் யோகா கிளாஸுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லும் ஆண்களும் பெண்களும் உடலில் இருந்து ஒரு சொட்டு வியர்வைக்கூட வெளிவரும்படி அன்றாட வாழ்வில் கவனம் கொள்வதில்லை; குறிப்பாக, பெண்கள் வீட்டு வேலைகளை செய்யும்பொழுதுகூட இயந்திர மனிதனைப் போல நின்று கொண்டேதான் செய்கின்றனர். குறைந்தபட்சம் குணிந்து நிமிர்வதுகூட இல்லை.
இவற்றை யெல்லாம் நாம் எண்ணிப்பார்ப்பதுமில்லை; கருதுவதுமில்லை.
இப்படிப்பட்ட சூழலில் மூச்சுப் பயிற்சிக்கு ‘யோகா’ என்ற சம்ஸ்கிருத முத்திரையைக் குத்தி, ஐநா மன்றத்தில் மோடி பேசியது, அங்குள்ளவர்களுக்கு, ‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பதைப் போல பெரிதாகப்பட்டிருக்கலாம்;
*ஆனால், நமக்கு?*
உடனே அம்மா தினம், அப்பா தினம், உப்பு தினம், சீனி தினத்தைப் போல(அந்தத் தினம், இந்தத் தினம் என்று ‘தினம்’ அறிவிப்பதைத் தவிர ஐநா மன்றத்திற்கு வேறு என்ன தெரியும்?) ‘யோகா’ தினத்தையும் அறிவிக்க அந்த ஐநா மன்றம் முடிவு செய்தது. இதற்கு 170 நாடுகள் ஆதரவாம். அந்த யோகா(மூச்சுப் பயிற்சி) நாள்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் திங்கள் 21-ஆம் நாளில் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு சமய சாயம் பூச மோடி முற்பட்டது அக்கிரமம். ஆனாலும் இது எடுபடவில்லை. அதேவேளை, இதை உடற்பயிற்சி என்ற அளவில் ஆஃப்காகானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற ஆசிய இஸ்லாமிய நாடுகளும் மேற்குலக நாடுகளும் உடனே ஏற்றுக் கொண்டாலும் மலேசியா போன்ற நாடுகள் ஓர் எச்சரிக்கை உணர்வுடன் மெல்ல ஏற்றுக் கொண்டன.
இருந்தபோதும், வளைகுடா மண்டலத்தில் சௌதி அரேபியா இந்த ஆசனப் பயிற்சி என்னும் யோகப் பயிற்சிக்கு தடைவிதித்திருந்தது. தற்பொழுது அங்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சௌதி அரேபியா போன்ற நாடுகள், உட்கார்ந்து செய்யும் உடற்பயிற்சியான யோகப் பயிற்சிக்கு தடை விதிக்கக் காரணம், ஒரு சில தரப்பினர் தொடர்ந்து யோகக் கலையை சமய எல்லையில் நிறுத்தும் வேலையை சளைக்காமல் மேற்கொள்வதுதான்.
உண்மையில், இது தமிழிய சித்தர்கள் உணர்ந்த நலம் தரும் சுவாசப் பயிற்சி ஆகும். பெருமைமிக்க இந்த மூச்சுப் பயிற்சியின் உன்னதத்தை அடியோடு தொலைத்து விட்டு, மற்றவர்கள் எப்படியோப் போகட்டும்; தமிழர்கள் ‘யோகா’, ‘யோகா’ என்று அலையலாமா?
இங்கே, கருத்து மட்டும் சிதையவில்லை; மொழியும் சிதைகிறது. நல்லோரே சிந்திப்பீர், ஒரு நொடிப் பொழுது! யோகா என்னும் சொல்லைத் தவிர்ப்போம். உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி அல்லது ஆசனப் பயிற்சி என்பதை நிலைநிறுத்துவோம்!!