ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் தெரிவிப்பு
“தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. எனினும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு இதனால் ஒரு நஸ்டமும்இல்லை. கஸ்டமும் இல்லை. ஆனால் மக்களுக்கே எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றவே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றம் வருகின்றார் என்று சிலர் விசமத்தனமான பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் எமது தலைவர் அனைத்தும் அறிந்தவர். அவருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். தற்போது என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பதும் புரியும். ஒரு மூழ்கப்போகும் கப்பலாக அவருக்கு தெரிகின்ற கப்பலில் அவர் ஏன் ஏறப்போகின்றார்? ஆனால் மக்களைக் காப்பாற்றவே அவர் மீண்டும் வருகின்றார். அங்கு எதிர்க்கட்சிக்குரிய கடமையை சரியாகச் செய்து, அதன் மூலம் அடுத்த தேர்தலில் எமது ஐக்கிய தேசியக் கட்சியே பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தும்”
இவ்வாறு தெரிவித்தார், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கித்ஶ்ரீ மஞ்சநாயக்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஶ்ரீகோத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
எமது கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்.அங்கு அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்.
தற்போது இலங்கை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்துக்கு சென்று இதுதொடர்பில் குரல் கொடுக்கவேண்டும் என்ற நோக்கிலே அவர் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்தார்.
அத்துடன் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் மரணங்களும் அதிகரித்து இருக்கின்றன. அதேபோன்று நாட்டின் பொருளாதாரமும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருகின்றது.
கொவிட்டை காரணம் காட்டி அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றது . அதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
அத்துடன் நாட்டின் எதிர்க்கட்சியும் அரசாங்கத்துக்கு முறையான அழுத்தங்களை காெடுப்பதற்கு தவறி இருக்கின்றது. நாட்டில் அரசாங்கமும் பைல், எதிர்க்கட்சியும் பைல் என்பதே மக்களின் நிலைப்பாடாகும். அதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவதை எதிர்க்கட்சி தங்களுக்கு பெரும் சக்தியாகவே பார்க்கவேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலர், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவதை விமர்சித்து வருகின்றனர்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க யாருடைய விம்பத்தையும் உடைக்கவோ அல்லது உயர்த்தவோ பாராளுமன்றம் வருவதில்லை. நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியின் கடமையை மேற்கொள்ளவே வருகின்றார்.