கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலம் ரொறன்ரோ மாநகரில் உள்ளது. ஒன்றாரியோ மாகாணப் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற வேளையில் அவரது வாசஸ்த்தலத்திற்கு முன்பாக கையில் கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவரை ஒன்றாரியோ மாகாணப் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என அறியப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் பற்றி ஒன்றாரியோ மாகாண காவல்துறையின் தலைமை அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை செவ்வாய்கிழமை வெளியிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வரின் அலுவலக பிரதான செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
தற்போது கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ரொறன்ரோவில் அமைந்துள்ள முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலத்திற்கு வெளியே பெரிய ஒரு கத்தியோடு காணப்பட்டதாக ஒன்றாரியோ மாகாணத்தின் காவல்துறையினர் கண்டுள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ஒன்ராறியோ மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த நபரை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
“தனது பாதுகாப்பு அதிகாரிகளின் விரைவானவும் துணிச்சலானதுமான தகுந்த நடவடிக்கைகளுக்காக முதல்வர் டக் போர்ட் அவர்கள் நன்றி கூறியிருக்கின்றார் , இதன் சம்பவத்தின் விளைவாக சம்பவத்தில் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படவில்லை” என்றும் முதல்வரின் பிரதான செய்தித் தொடர்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.
ஓன்றாரியோ மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த கத்தி வைத்திருந்த நபர் முதல்வர் அவர்களின் வாசஸ்த்தலத்தை நெருங்குவதற்கு முன்பு அந்த வீதிகளில் காணப்பட்ட பல வாகனங்களின் டயர்களை வெட்டியதாகவும் இதை கண்ட அயலவர்கள் அதை காவல்துறையினருக்கு அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.