கவிஞர் என்றால் கண்ணதாசனே!
காலத்தை வென்று நிற்பவர்
வையம் உள்ளவரை வாழிய வாழியவே !!
கண்ணதாசன் என்னும் கவிஞன் பிறந்தான்
காலத்தை வென்று நிற்கும் கவிதை புனைந்தான்
எண்ணத்தில் இருந்ததெல்லாம் எழுத்தில் வடித்தான்
ஏதோ சிலநேரம் அழுதும் முடித்தான்
இலக்கியத்தில் தோய்ந்து ஆய்ந்து கவிதை படைத்தான்
எளியதமிழில் அதனை எல்லோர்க்கும் கொடுத்தான்
பலாப்பழம் போன்ற நல்லதமிழ்ப் பாடலை
பக்குவமாய்ச் சுளையாக எடுத்துக்
கொடுத்தான்
உண்ண உண்ணத் தெவிட்டாத இனிய சுவைதான்!
உணர உணர வியப்புதரும் தத்துவங்களே!
திரைப்பாடல் தெவிட்டாத தேன்தமிழ்ப் பாடலே!
தேனினும் இனிய தமிழ்க்கவிதை அமுதமே!
மனவாசம் வனவாசம் எழுதி வைத்தான்
மற்றவரைக் காட்டிலும் உண்மை உரைத்தான்
யாரேனும் எனைப்பற்றி ஏதேனும் நினைப்பரென
நூலேனும் மறைக்காகாமல் நூலினுள் எழுதிவைத்தான்
அனுபவிப் பதற்காகவே இறைவன் படைத்தான்
அனுபவித்து வாழவே அவனும் நினைத்தான்
அன்பெனிலும் வம்பெனிலும் அதனதன் எல்லையே
முரணான சிந்தனைகள் கொண்ட கவிஞன்
முற்றிலும் பொய்முகம் காட்டாத மனிதன்
ஒருகையில் மதுவும் ஒருகையில் மாதென
உலகை அனுபவித்து மகிழ நினைத்தான்
போலியான பொய்த்தோற்றம் அவனுக் கில்லை
போற்றுதலும் தூற்றுதலும்அதனதன் எல்லை
காலம் கடந்தும் வாழ்ந்து இருப்பான்
கம்பன் பாரதி வரிசையில் பார்க்கும்
கவிஞன் என்றால் கண்ண தாசனே!
அ.தமிழரசி
28-6-2020