(மன்னார் நிருபர்)
(24-06-2021)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை கடற்கரை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை 1363 கிலோ உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகள் மீட்கப்பட்டதோடு, குறித்த மஞ்சள் கட்டி மூடைகளை சட்ட விரோதமான முறையில் கொண்டு வந்தார்கள் என்ற சந்தேகத்தில் 3 நபர்களை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.
சிலாவத்துறை பகுதியில் உள்ள அல்லிராணிக் கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் வைத்து சிலாவத்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 26 மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1363 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியதோடு,சட்ட விரோதமான முறையில் அவற்றை கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவர்கள் பயன் படுத்திய படகு மற்றும் படகின் வெளியிணைப்பு இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை சிலாவத்துரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.