25-06-2021 கதிரோட்டம்
கனடா என்னும் தேசம் குளிர் நிறைந்த ஒரு நாடு என்று அறியப்பட்டாலும் அந்த நாட்டில் நாம் காலடி எடுத்துவைத்தால் எமது மனங் குளிரும் வண்ணம், அந்த தேசத்தின் அரசின் பிரதிநிதிகளே எம்மை விமான நிலையத்தில் வரவேற்று உபசரிப்பார்கள் என்ற கணிப்பு பல்லாண்டு காலமாய் அழியாத ஒரு கருத்தோவியமாக காட்சி அளித்து வந்தது.
உலகில் எந்த நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், அங்கு இன ரீதியாகவோ, மொழியைக் காரணமாகக் கொண்டோ, அல்லது பின்பற்றும் மதம் சார்ந்த எதிர்ப்புணர்வு காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ அங்கு வாழ முடியாத ஒரு அபாயகரமான சூழ்நிலை உங்களில் யாருக்காவது ஏற்படுமானால், நீங்கள் கனடாவிற்கு வாருங்கள். எமது நாட்டு விமான நிலையங்களின் வாசல்கள், உங்கள் வருகைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்திருக்கின்றன” என்ற அரச அறிவிப்பு கூட கனடிய அரசியல் பீடத்திலிருந்து வெளியிடப்பட்டன.
சில வருடங்களுக்கு முன்னர் சிரிய தேசத்திலிருந்து அங்கு வாழ முடியாமல் உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, கனடிய தேசத்து மக்களின் அழைப்புக் கிடைத்து இங்குள்ள விமான நிலையங்களில் வந்திறங்கிய சிரிய தேசத்தின் அகதிக் குடும்பங்களை வரவேற்பதற்காய் விமான நிலையத்திற்கு நேரடியாகவே தனது துணைவியாரோடு சென்று வரவேற்று பரிசுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வழங்கியவர் கனடாவின் தற்போதைய பிரதமர் கௌரவ ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ஆவார்.
இவ்வாறு, கனடாவின் கருணை உள்ளத்தையும் காருண்ய பண்புகளையும் படம் பிடித்துக் காட்டுவதற்கு ஏராளமான ‘கதைகள்’ இருக்கின்றன. இந்த புண்ணிய பூமியின் மீது ஒரு அகதியின் பாதங்கள் எப்போது படுகின்றனவோ அன்றிலிருந்து அந்த நபர் தனது துயரங்களையெல்லாம் மறந்து, புதுவாழ்க்கையைப் பெற்றிடுவார் என்ற நம்பிக்கை இன்றும் உலகெங்கும் தளிர்விட்ட வண்ணமே உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக கனடா தேசமெங்கும் கிளர்ந்தெழுந்து நிற்கும் இந்நாட்டின் பழங்குடியினர் தொடர்பான திகைப்பையூட்டும் செய்திகள் கனடாவின் கனிவு பற்றிய பிரச்சாரங்களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டது போன்று ஆக்கிவிட்டன. கனடா என்னும் தேசத்தில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இந்த நாட்டை காத்து நின்ற அந்த ‘குடியினர்’ தங்கள் குழந்தைகளுக்கு நடந்த ‘கொரூரங்கள்’ பற்றிய செய்திகளை ஏக்கத்தோடும் கடுங் கோபத்தோடும் வெளிப்படுத்துகின்ற செய்திகள் எழுத்திலும் காட்சிகளிலும் வருகின்றபோது, கனடாவின் அரசியல் தலைவர்களே திகைத்தவர்களாக தடுமாறும் நிலை தோன்றியுள்ளதை நன்கு காணக்கூடியதாக உள்ளது.
ஆமாம் நண்பர்களே! சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் வெள்ளை இன பாதிரிகள் நடத்திய கிறிஸ்தவ பாடசாலைகளிலே கல்வி கற்று வந்த கனடாவின் பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், சிறுவர் சிறுமியர் என ஆயிரக் கணக்கானவர்களை கொலை செய்து புதைத்த கொடியவர்களின் பாதகச் செயல்களுக்கு அடையாளமாக அநியாயமாக பழி வாங்கப்பட்ட அந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் ஒரே இடத்திலும் பல இடங்களில் பரவியும் உள்ளதை கண்டுபிடித்த அந்த மக்கள் பதறுவதை காட்சிகளாகப் பார்க்கிறது இந்த உலகம். இப்போது உள்ள பழங்குடியினர் சார்ந்த சமூகத்தின் தலைவர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் ஒரு போர்க்குற்றத்தைப் போன்ற ஒரு பாரிய இன அழிப்பைச் செய்த குற்றவாளிகளை யார் என்று கண்டு பிடிக்க கனடிய அரசாங்கம் தனது வளங்களைப் பிரயோகிக்க வேண்டும். நிதியைச் செலவு செய்ய வேண்டும் என்று போராடத் தொடங்கியுள்ளார்கள்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் போன்றவை அடையாளப் பொருட்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதலில் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொலைக் குற்றத்தின் அடையாளங்களைப் போன்று வேறு சில மாகாணங்களிலும் நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே இயங்கிவரும் பழங்குடியினர் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் என கனடாவின் ‘பழங்குடியினர்’ தங்கள் ஓற்றுமையை அடையாளமாகக் கொண்டு போராடத் தொடங்கியுள்ளார்கள்.
இதனால் கனடாவின் பிரதமர், மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சர் என அனைவருமே எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான நேரத்தில் தான் கனடாவின் பிறந்த நாள் நெருங்கி வருகின்றது. அடுத்த வாரத்தில் வரும் யூலை மாதம் முதலாம் திகதியன்று Canada Day என்று மகிழ்ச்சியோடு கொண்டாடப் படுகின்ற கனடாவின் பிறந்த தினம் இவ்வருடம் மௌனிக்கப் போகின்றது என்பது வெளிச்சமாகத் தெரிகின்றது. கனடாவின் பல நகர சபைகள் தாங்கள் வருடா வருடம் கொண்டாடுகின்ற இந்த பிறந்த நாளை இவ்வருடம் கொண்டாடும் சாதகமான நிலை இல்லை என்று அறிவித்துள்ளன.
ஒரு இன மக்கள் தங்கள் உறவுகளின் அநியாயப் படுகொலைகளை எண்ணி அழுது கொண்டிருக்கின்ற போது, நாம் எப்படி கனடாவின் பிறந்த நாளை கொண்டாடுவது என்ற கேள்விகளோடு இருக்கும் கனடியர்களுக்காக, யூலை முதலாம் திகதி இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகின்றது. பழங்குடியினர் அனுபவிக்கும் சோகத்தை எமது ஈழத் தமிழர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இவ்வாரக் கதிரோட்டத்தை கனடியப் பழங்குடியினர் என்ற அந்த சமூகத்திற்காக சமர்ப்பிப்போமாக!