சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்)
“I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality… I believe that unarmed truth and unconditional love will have the final word“.
Martin Luther King’s Acceptance Speech, on the occasion of the award of the Nobel Peace Prize in Oslo, December 10, 1964
அமெரிக்க மனித உரிமைகள் போராளியான மார்ட்டின் லூதர் கிங் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய ஏற்புரை மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை. அமெரிக்காவில் ஆழமாகப் பிளவுபட்டிருந்த கறுப்பு-வெள்ளையின சமூகத்திடையே இருந்த பிரச்சனைகள், வெள்ளையின மேலாதிக்கம், கறுப்பின ஒடுக்கம், வன்முறைகள், கைதுகள், கொலைகள் என நாடே மிகவும் கொந்தளிப்பாக இருந்த காலகட்டம் அது.
அவரது ஏற்புரை இன்றளவும் பிளவுபட்டுள்ள சமூகங்களைப் பிரதிபலிக்கிறது. இனவாதம், போர் போன்றவற்றிலிருந்து மனிதர்களும் சமூகங்களும் வெளிவர முடியாது, சமாதானமும் சகோதரத்துவமும் யதார்த்தத்தில் சரிப்பட்டு வராது என்பதை நான் நம்பவில்லை. பரிசுத்தமான உண்மையும், கட்டுப்பாடுகளற்ற அன்பும் கடைசியில் வெல்லும் என்று அவர் கூறியது இன்றளவும் மிகவும் பொருந்தும்.
அவரது வார்த்தைகளை-அந்த ஏற்புரையை- அமைதியான நேரத்தித்தில் இலங்கையில் ஆட்சி பீடத்திலுள்ளவர்களும், அதில் இருந்தவர்களும், யாருடைய ஆட்சியாக இருந்தாலும் அதை ஆட்டி வைப்பவர்களும், நாட்டில் எவ்வகையிலும் இணக்கப்பாடு வந்துவிடக் கூடாது என்று அயராது உழைப்பவர்களும், நாட்டிலுள்ள அனைவரும் வாசிக்க வேண்டும்.
மார்ட்டின் லூதர் கிங் கூறியதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வெறுப்புணர்வு ஒருநாளும் வெற்றி பெறாது. விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்பதே.
இலங்கையில் போர் முடிந்து 12 ஆண்டுகளான நிலையில் ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து நிலவிய வெறுப்புணர்வு மறைந்திருந்தால், போரின் ரணங்கள் ஆறியிருக்கும், வடுக்களும் மறையத் தொடங்கியிருக்கும். ஆனால் அந்த ரணம் ஆறாமல் இருந்தால் மட்டுமே தென்னிலங்கையில் அரசியல் செய்ய முடியும் என்ற கீழ்நோக்கு எண்ணமே தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களிடம் மேலோங்கி இருந்தது.
இலங்கை அரசு 16 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக செய்திகள் வந்த போது, மக்களிடையே நிறத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ வேற்றுமை இல்லை என்று கூறியமார்ட்டின் லூதர் கிங்கின் நினைவு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் எந்த இலங்கை அரசுக்கும் `நரி` ஜெ.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் ஆர்வமிருக்கவில்லை. போருக்கு எதிரான மிகப் பெரும் ஆயுதங்களில் ஒன்றாக அதைப் பயன்படுத்தியது தொடர்ச்சியாக வந்த அரசுகள். போருக்குப் பின்னரும் அதே நிலை.
அப்படியானால் பயங்கரவாதம் தொடர வேண்டும், அதன் மூலம் குளிர் காய வேண்டும் என்பது தான் இலங்கை அரசுகளின் திட்டமாக இருந்துள்ளதா எனும் கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் சர்வதேசத் தரப்பிலிருந்து பல்முனை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசுக்கு அதை எதிர்கொள்ள ஒரு துருப்புச் சீட்டு தேவைப்பட்டது. ஜிஎஸ்பி+ வரிச்சலுகை பரிபோய்விடும் அபாயம், அரசு கூறும் அதே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடக் கிடைக்கும் நிதியுதவிகள் நிறுத்தம், சில அரசியல் தலைவர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் மூத்த இராணுவ அதிகரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான தடைகள் என்று பல நெருக்கடிகள் ராஜபக்ச அரசு மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.
சர்வதேசத்தில் உக்கிரப் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர்களுக்கும் ஒரு வழி தேவைப்பட்டது. உள்நாட்டிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் தலையாய பிரச்சனையாக முன்வைத்த அரசியல் கைதிகளின் விடுதலை என்பதில் கவனம் செலுத்தினால் இப்போது ஓரளவுக்கு மூச்சுவிட முடியும் என்று ராஜபக்சக்கள் நம்பினார்கள்.
ஆனால், அரசியல் வித்தகர்களான ராஜபக்சக்கள் தாங்கள் செய்யும் எந்த முன்னெடுப்பும் அதனால் ஏற்படக் கூடிய பலனும் அடுத்தவர்களுக்கு கிடைத்துவடக் கூடாது என்பதில் என்றுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்.
ராஜபக்சக்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்பது இலங்கையில் அறியப்பட்ட ஒன்று.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் மக்களை பிரதானமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவாக தங்களைக் கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அவரை நேரடியாக முதல் முறையாகச் சந்திக்கும் கூட்டமொன்று ஏற்பாடாகி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சில அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேசினால் அது கசிந்துவிடும் என்று அரசு கருதியதாலேயே கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்கள் கூறின.
இதையடுத்தே நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உரையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேசினார். அவர் பேசி முடித்ததும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், இது குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி பேசாமல், அதற்குத் தொடர்பில்லாத அமைச்சரான நாமல் பேசுவதற்கு விதிகள் மற்றும் மரபுகள் ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நாமல் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பு குறித்துப் பேசுவதற்கு துறை ரீதியாக உரிய அமைச்சராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர். சர்வ வல்லமை கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன், ஜனாதிபதி கோத்தாபய, சாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரின் பெறாமகன்.
எனவே அவர் மூலமாக அரசியல் கைதிகளின் விடுதலை என்கிற முன்மொழிவை செய்ய வைத்து அரசியல் ஆழம் பார்த்தனர் ஆட்சியாளர்கள். பொதுவாக தமிழர்களின் நலன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்கிற பேச்சு எழுந்தாலே உடனே கொந்தளித்து எழும் பிக்குமார்களும், விமல் வீரவன்ச, உதயன் கம்மன்பில போன்ற அரசியல் தலைவர்களும் இம்முறை வாயைத் திறக்கவில்லை. ஒன்று திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டிருக்கலாம் அல்லது திறந்தால் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவீர்கள் அல்லது பிக்குமார்களுக்கு அரச ஆதரவு கிடைக்காது என்கிற செய்தி சொல்லப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த 16 பேர் விடுதலையை கவனமாக ஆராய வேண்டியுள்ளது. கீழேயுள்ள அட்டவணையை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிரின் மாலை பதிப்பு நேற்று (வியாழன்-24) அன்று வெளியிட்டது. அதைக் கூர்ந்து கவனித்தால் அரசு ஒன்றும் பெரிய விட்டுக் கொடுப்பைச் செய்யவில்லை என்பது தெரியும்.
இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல், ஆண்டுக் கணக்கில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இப்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் கூட நீண்டகாலம் சிறை வாசம் அனுபவித்தவர்கள்.
இவர்களின் விடுதலைக்கு தாங்கள் எடுத்த நடவடிக்கையே காரணம் என்று பல அரசியல் கட்சிகள் உரிமை கோரும். அவர்களுடைய பங்கும் இதில் உள்ளது.
புத்தபிரான் இலங்கைக்கு வந்த தினம் என்று கருதப்படும் பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமான ஒன்று. அந்த தினத்தையொட்டி அரசு வழங்கும் பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக இந்த 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
We welcome the early release of PTA prisoners, but the pardon of Duminda Silva, whose conviction the Supreme Court upheld in 2018, undermines rule of law. Accountability and equal access to justice are fundamental to the UN SDGs to which the GoSL has committed.
— Ambassador Teplitz (@USAmbSLM) June 24, 2021
இவர்கள் வழக்கு முடிந்து தண்டனை அனுபவித்தவர்கள். அதுவும் பல ஆண்டுகள். இவர்களுடன் சேர்த்து கொலை வழக்கில் சிறை சென்ற துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டுள்ளது கண்டங்களை எழுப்பியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் டெப்லிட்ஸ் டிவிட்டரில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்றுள்ள அதேவேளை, துமிந்த சில்வாவின் விடுதலை என்பது சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் பின் தேதியிட்டு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே சிறையில் வழக்குகளை எதிர்கொள்ளாமலும், அந்த சட்டத்தின் கீழ் ஒருதலை பட்சமாக வழக்கு விசாரணையை எதிர்கொண்டு தண்டனை அனுபவித்து வருபவர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு வழி வகுக்கும்.
இந்த 16 பேர் விடுதலை என்பது ஒரு மிகச்சிறிய முன்னெடுப்பு. அது வரவேற்கத்தக்கது, தொடர வேண்டும்…..