(மன்னார் நிருபர்)
(26-06-2021)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கள்ளியடி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்ட காணிகளை தனி நபர் ஒருவர் அபகரித்து காடுகளை அழித்து அத்து மீறி செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்களினால் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் சனிக்கிழமை (26) மதியம் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலமையை அவதானித்தார்.
குறித்த பகுதியில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு என 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகள் வன வள திணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மக்களின் தேவைக்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
பொருளாதார நிலை மற்றும் ‘கொரோனா’ பிரச்சினை காரணமாக மக்கள் காணிகளை துப்பரவு செய்யாத நிலையில் மாந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு வார காலத்திற்கு மேலாக மக்களின் காணிகளை துப்பரவு செய்ததுடன் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்களால் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடன் முறையிட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (26) மதியம் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன் மக்களிடம் நேரடியாக பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதே நேரம் குறித்த பிரச்சினை சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளாருக்கு தெரியப்படுத்தி விரைவில் மக்களின் காணிகளை விடுவித்து வழங்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.