மன்னார் நிருபர்
(28-06-2021)
எரிபொருள் விலையேற்றத்தினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் நியாமான முறையில் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
ஆழ்கடல் பல நாள் கலன்களின் உரிமையாளர்களுடன் இன்று(28.06.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,
எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள், எரிபொருள் மானியம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, மண்ணெண்ணை விலையை 35 ரூபாயினால் அதிகரிப்பதற்கு துறைசார் தரப்புக்களினால் விருப்பம் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்றொழில் அமைச்சின் வலியுறுத்தல் காரணமாகவே 7 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும், குறித்த விடயம் தொடர்பான நாடளாவிய கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நியாயமான முறையில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார்.