உலகில் சற்று ஓய்ந்துள்ள கொவிட் 19 தொற்றின் வேகமான பரவல் அந்தந்த நாடுகளை சற்று சாந்தப்படுத்தினாலும், தற்போது இந்த தொற்றின் மூன்றாவது அலையானது முன்பை விடவும் இலங்கையில் வேகமாகப் பரவக் கூடியதாக உள்ளது என இலங்கையின் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளார்கள்..
இந்த தொற்று அதிகரிப்பிற்கு உள்ளானவர்களாக நாளாந்தம் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள் வைத்தியசாலைகளிலும், இடைநிலை சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவ பராமரிப்பு அளிக்கப்படுகின்றனர்.
இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக தினமும் அடையாளம் காணப்படுபவர்கள் சகலரையும் மருத்துவப் பராமரிப்புக்காக உடனுக்குடன் வைத்தியசாலைகளிலும் இடை நிலை சிகிச்சை நிலையங்களிலும் அனுமதிப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரண்டொரு நாட்கள் வீடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. ஏனெனில் இடநெருக்கடியே இதற்கான காரணமாக உள்ளது. ஆனாலும் இத்தொற்றானது தொற்றுக்கு உள்ளானவரிடமிருந்து ஏனையவர்களுக்கு பரவவும், தொற்றுக்கு உள்ளானவரிடம் வளர்ச்சி பெறவும், தீவிரமடையவும் வீட்டில் இருக்கும் காலப் பகுதியை வாய்ப்பாகப் பெற்றுக் கொள்கின்றது.
இது ஆரோக்கியமானதல்ல. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப மருத்துவ பராமரிப்பு அளிக்கப்படுவது அவசியம். குறிப்பாக இத்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ஆரம்பம் முதல் மருத்துவ ரீதியிலான உரிய பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும். அதுவே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
இந்தப் நிலையில் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஆரம்பம் முதல் மருத்துவ பராமரிப்பு அளிப்பதற்கான விஷேட திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் வீடுகளில் தங்கி இருக்கும் காலப் பகுதியில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நியமங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுவர்.
இத்திட்டமானது பிரதேச மட்ட வைத்தியர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கென 1390 என்ற விஷேட தொலைபேசி இலக்கமும் (Hotline) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் வைத்து பராமரிக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் மருத்துவர்கள் தொடர்புகளைப் பேணி கண்காணித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதோடு, தொற்றாளர் தொடர்பில் மேலதிக மருத்துவ பராமரிப்பு தொடர்பில் முடிவுகளையும் எடுப்பர்.
இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய வேலைத் திட்டமாகும். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில், கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஆரம்பம் முதல் உரிய மருத்துவ பராமரிப்பு அளிக்கப்படுவதன் அவசியம் சுட்டிக் காட்டப்பட்டதோடு, தற்போதைய சூழலில் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு மருத்துவ பராமரிப்பு நிலையங்களுக்கு செல்லும் வரையிலும் வீடுகளில் தங்கி இருக்கும் காலப் பகுதியில் உரிய மருத்துவ பராமரிப்பு அளிக்கப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக் காட்டப்பட்டது. அதற்கு ஏற்பதான் சுகாதார அமைச்சர் இந்த விஷேட திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
உண்மையில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் வரையிலும் வீடுகளில் தங்கி இருக்கும் காலப் பகுதியிலும் உரிய மருத்துவ பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இத்தொற்று ஏனையவர்களுக்கு பரவவும், வளர்ச்சி அடையவும் தீவிர நிலையைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பைப் பெறறுக் கொள்ளும். அது சில சமயம் உயிராபத்து மிக்க அச்சுறுத்தலாகக் கூட அமைந்து விடலாம்.
இவ்வாறான துரதிர்ஷ்ட நிலைமையைத் தவிர்ப்பதற்காக இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியானதும் அது தொடர்பில் பராமரிப்பு அளிக்கப்படுவது மிகவும் முக்கியமான விடயம் என்பதை மறந்து விடலாகாது.
ஆகவே தற்போதைய சூழலில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் இருக்கும் காலப் பகுதியிலும் மருத்துவ பராமரிப்பை அளிக்க முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும். அதனால் இத்திட்டத்தின் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதில் ஒவ்வொருவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இத்தொற்று உறுதியானால் அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தென்படா விட்டாலும் வீடுகளில் இருக்கும் காலப் பகுதியில் இந்த அவசர தொலைபேசி வசதி மூலம் மருத்துவ பராமரிப்பை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் கொவிட் 19 தொற்று பரவுவதையும், நோய் வளர்ச்சியடைவதையும் தீவிரமடைவதையும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
விசாகன்