127 கிலோ எடையுள்ள ஒருவர் 5 மாதங்களில் 45 கிலோ எடையை எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி குறைத்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் இது ஒரு கற்பனைக்கு கதையாகத் தான் தோன்றும். ஆனால் சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞரான விஜய் சங்கர்(வயது 40) இது ‘கதையல்ல நிஜம்’ என்று உற்சாகமாக கதைக்கிறார், கனடா உதயனின் சிறப்பு நேர்காணலில் இது எப்படி சாத்தியமாயிற்று என்ற ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அவரிடம் நேயர்கள் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அவரும் அதற்கான பதில்களை தன்னுடைய அனுபவத்தின் மூலம் கிடைத்தவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
முதலில் உங்களை பற்றிய ஓர் அறிமுகத்தை சொல்லுங்கள் …
என்னுடைய பெயர் விஜய் சங்கர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு இடங்களில் பணி செய்துவிட்டேன். பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வேலை இருக்கும். இதனால் சரியான நேரத்தில் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. இதன் காரணமாக 127 கிலோ வரை என்னுடைய எடை கூடிவிட்டது. இதனால் நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தாரின் ஏளனத்துக்கு ஆளானேன். மன உளைச்சலும் அதிகமானது. அந்த நேரத்தில் நிறைய ‘கூகுள்’ செய்து எடை குறைப்பிற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். தொடர் முயற்சிக்கு கை மேல் பலனாக 5 மாதங்களில் சுமார் 45 கிலோ எடையை குறைத்தேன். இதற்காக நான் சின்ன சின்ன பயிற்சிகள், நடை பயணம், மற்றும் சாப்பாட்டு முறைகளை மட்டுமே பின்பற்றினேன். எடையை குறைக்கிறேன் என்று லட்சக் கணக்கில் பணத்தை பிடுங்கும் கூட்டத்திற்கு மத்தியில் நான் கற்றுக்கொண்டதை பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன்.
நீங்கள் எடை குறைப்பினை எப்படி கற்றுக் கொடுக்கிறீர்கள் ? இதற்காக ஏதேனும் கட்டணம் வாங்குகிறீர்களா?
நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல, என்னுடைய எடை சுமார் 127 கிலோ வரை சென்றதும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனை எப்படியாவது குறைக்க வேண்டும் என எண்ணி சில தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடினேன். ‘லிப்போ சர்ஜரி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் எடையை குறைக்க சுமார் 20 லட்சம் வரை ஆகும் என சொன்னதை கேட்டு மலைத்துப் போனேன். இதே போல் எங்கு சென்றாலும் பணத்தை மட்டுமே நம்மிடம் பிடுங்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதில் இன்னொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும், இது மாதிரியான சிகிச்சைகள் மூலம் நாம் எடையை குறைத்தாலும், பின்னாளில் பக்கவிளைவுகளும் மீண்டும் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதை இவர்கள் மறைத்து விடுகிறார்கள். அப்போது தான் நான் முடிவு செய்தேன். எடை குறைப்பிற்கான ஆராய்ச்சியில் நானே இறங்கினேன். அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் முதலில் எனக்கு நானே பரிசோதித்து அதனை ஆதாரப்பூர்வமாக பதிவும் செய்து வைத்துள்ளேன். எனக்கு கிடைத்த நல்ல பலன் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் யாரிடமும் கட்டணம் பெறுவதில்லை.
எடை குறைப்பிற்காக நீங்கள் கொடுக்கும் பயிற்சிகளைப் பற்றி சொல்லுங்கள்…
மிகவும் எளிமையான அனைவராலும் செய்யக்கூடிய பயிற்சிகளையே நான் சொல்லித் தருகிறேன். உதாரணமாக சொல்வதானால் தினமும் முறையான நடைபெயர்ச்சி எடுப்பதன் மூலம் மட்டுமே நம்முடைய எடையை குறைக்க முடியும். கூடுதலாக ஒரு சில உடற்பயிற்சிகள், நார் சத்து உள்ள உணவு முறைகளை மேற்கொண்டாலே போதுமானது. இதைத் தான் என்னிடம் எடை குறைப்பிற்காக வருபவர்களுக்கும் கற்றுத்தருகிறேன்.
உங்களின் பயிற்சியின் மூலம் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்…?
என்னிடம் கற்க வரும் பெரும்பாலோனோரை நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது என்பது தான் உண்மை. எடை பருமனாக தோற்றமளிப்பவர்களின் வேதனையை நானே அனுபவித்துள்ளேன். என்னுடைய எடை குறைப்பினை நான் நேரலையில் நேரம், தேதி உட்பட அனைத்தையும் பதிவு செய்து ‘யூ டியூபில்’ பகிர்த்தேன். அதனை பார்த்து தான் உலக அளவில் சுமார் 3.5 லட்சம் பேர் இந்த சேனலை பின் தொடர்கின்றனர். கனடாவை சேர்ந்த நண்பர் ராஜு என்னுடைய ஆலோசனையின் மூலம் 45 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இதே போல் மற்றவர்களின் எடை குறைப்பையும் முதல் நாளில் இருந்தே ‘TDS Motivation’ என்ற முகநூல் பக்கத்தில் தினமும் அவர்களின் எடை மற்றும் தினசரி தோற்றத்தை தேதி, நேரம் உட்பட்ட விபங்களுடன் பதிவு செய்கிறோம். இதனை பார்ப்பவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இம்மாதிரியான உத்திகளை பயன்படுத்துகிறோம். இதற்கு கை மேல் பலனாக இதனை பார்ககும் மற்றவர்களும் எடை குறைப்பில் அதிக கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சியை மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாப்பாட்டு முறை (Diet) என்ன?
இங்கே பிரச்சனை என்னவெனில் (Diet) என்றால் என்னவென்றே தெரிவதில்லை. உதாரணமாக எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதாலும், கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமே உடல் எடை கூடுவதாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது மிகப்பெரிய தவறு. (Diet) என்பது நம் தேவைக்கு அதிகமான உணவு பொருட்களை குறைத்துக் கொண்டாலே போதுமானது. ‘கார்போ ஹைட்ரேட்’ சார்ந்த உணவு பொருட்களை அதிகம் எடுப்பதாலேயே ‘FAT’ எனப்படும் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம். நாங்கள் கலோரிகளின் அடிப்படையில் தினசரி உணவை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். சராசரியாக ஒரு நபருக்கு 2400 கலோரிகளே போதுமானது. ஒரு நாளைக்கு நமது சாப்பாட்டில் 7000 க்ளோரிகளை அதிகமாக எடுத்தால் ஒரு கிலோ எடை கூடும். இது அறிவியல்பூர்வமான உண்மை. அதேபோல் நமது உணவில் கண்டிப்பாக தினசரி ‘புரோட்டின்’ எனப்படும் புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் எடை 80 கிலோ என எடுத்துக் கொண்டால் 80 கிராம் புரதம் உங்கள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் யாருமே அதை பின்பற்றுவதில்லை. எனவே எங்களிடம் வருபவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்றவாறு ஆலோசனைகளை வழங்குவோம்.
இரவு நேரங்களில் (Night Shift) வேலை செய்வதற்கும் உடல் எடை கூடுவதற்கும் தொடர்பு உண்டா..?
இரவு நேரங்களில் வேலை செய்வதால் மட்டுமே உடல் எடை கூடிவிடும் என்று சொல்ல முடியாது. அதனை யாரும் அறிவியல் பூர்வமாகவும் யாரும் இன்று வரை நிரூபிக்கவில்லை. இதையெல்லாம் ஒரு சாக்கு போக்காக நமது மக்கள் கூறிவருகின்றனர் அவ்வளவு தான். உடல் எடை கூடுவதர்க்கு இதுவும் ஒரு காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். முறையான உடல் உழைப்பும், நடை பெயர்ச்சியும் செய்தாலே நமது உடல் எடையை கட்டு கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
இந்த பயிற்சியை பாதியில் விடுவதாலோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலோ குறைந்த எடை கூடிவிடும் என்கிறார்களே..? உண்மைதானா…?
இது முழுக்க முழுக்க நம் மக்களின் மனநிலை. இதே கேள்வியை நான் உங்களிடத்தில் திருப்பி கேட்கிறேன்.. எதனால் எடை கூடுகிறது..? சரியான உணவு பழக்கமும், முறையான உடல் உழைப்பும் இல்லாத காரணத்தால் தான் உடல் எடை கூடுகிறது. சரியான உடல் உழைப்பும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றாமல் நமது எடை மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
உங்களின் எதிர்கால லட்சியம் தான் என்ன..?
உடல் எடையை குறைப்பதற்காக மக்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள், அதற்காக பல லட்சங்களை செலவு செய்கிறார்கள். இதனை வைத்து நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. அடிப்படையில் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும், நமது முன்னோர்கள் வீட்டுக் சென்ற உணவு முறைகளை பின்பற்றினாலே நமது உடலையும், எடையையும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள முடியும். கால மாற்றத்தின் காரணமாக நாம் மறந்து போன உணவு முறைகளை மீண்டும் அவர்களிடத்தில் கொன்டு செல்வதின் மூலம் ஆரோக்கியமான உடலையும், வளமான வாழ்வையும் அனைத்து மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் இறங்க இருக்கிறோம். மக்கள் இதனை பின்பற்றினால் உடல் பருமன் என்ற பிரச்சனையே வராது. மொத்தத்தில் உடல் எடையை குறைக்கிறேன் என கூறிக்கொண்டு யாரும் பணத்தை வீணாக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம்.
உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறார் விஜய் சங்கர். தன்னலமற்ற இந்த இளைஞரின் முயற்சிகள் வெற்றியடைய கனடா உதயன் நேயர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து விடை பெற்றோம்.
விஜய் சங்கரின் ‘யூடியூப்’ லிங்க் https://www.youtube.com/channel/UCeBWU9awHX3WPR7chSCoE0g