இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு புனித திருத்தலம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம்.
போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் 1544 ஆம் ஆண்டில் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னை மரியாள் உருவத்தை வைத்து வணங்கினர். மேலும், 1583ஆம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர்.
‘மண்தாய்’ என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னை மரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656ஆம் ஆண்டில் டச்சுக்காரர் இலங்கையில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கிய போது கத்தோலிக்கரை துன்புறுத்தியதாக வரலாறு கூறுகிறது.
அப்போது புகலிடம் தேடிய 30 கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னையின் திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670 ஆம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர். அந்த இடத்தில் தான் தற்போதைய மடு அன்னை திருத்தலம் உள்ளது.
இவ்வாறு தற்போதைய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த நிலையிலும் இவ்வாலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் ஆடி மாத திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றது. இம்முறை கொரோனா தொற்றின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்களுடன் கொடியேற்றம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகளும் இடம்பெற்றன.
இன்று வெள்ளிக்கிழமை 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்படுகின்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் குருநாகல் மறைமாவட்ட ஆயர் ஹரல்ட் அன்ரனி ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் றஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை (கூட்டுத் திருப்பலி) ஒப்புக் கொடுக்கின்றனர்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,ஆசியும் வழங்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு,வெளி மாவட்டங்களில் இருந்து மடு திருத்தலத்திற்கு வருகை தருவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் மடுமாதாவின் அருள் வேண்டி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது.