இயற்கைத் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படும் கைகள் துடைப்பதற்கு பயன்படும் கடதாசிகள் இலங்கையில் தயாராகின்றன . அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் சமுர்த்தி உதவி பெறும் ஒருவரால் ஜப்பான் ஜபர, இலுக், மானா, சோளம் இலைகள் மற்றும் வாழைமடல் உள்ளிட்ட தாவரப் பகுதிகளை பயன்படுத்தி கடதாசி உற்பத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி உதவி பெறுவோரின் பங்களிப்புடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ராஜாங்கனை பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ராஜாங்கனை யாய 13 இல் வசிக்கும் ஒருவரே இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். இத்திட்டத்தில் சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் என 30 பேர் கொண்ட குழுவினர் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான கடன் மற்றும் இயந்திர சாதன வசதிகளை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தைப் பார்க்கும் போது கி.பி 105 ஆண்டை நினைவூட்டுகின்றது. சீனாவில் சாய் லூங் இலை மற்றும் குப்பை போன்றவற்றை சிதைத்து, அவித்து தயாரித்த கூழில் கடதாசி உற்பத்தி செய்யப்பட்டது. உலகில் குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளப்பட்ட கடதாசி உற்பத்தி அதுவாகும். இயந்திர சாதனங்களின் உதவியின்றி கடதாசியை உற்பத்தி செய்த முதல் சாதனையும் அதுவாகவே இருந்தது.
தாவரங்களின் இலை மற்றம் தண்டு போன்ற பகுதிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அவிப்பதன் மூலம் கிடைக்கும் கூழ் போன்ற பதார்த்தத்தை சட்டகத்தில் இட்டு, பின்னர் அதை அச்சில் உலர்த்துவர். தேவைப்பட்டால் நிறத்தை மாற்ற கூழில் வெவ்வேறு வண்ணங்களைச் சேர்க்கும் திறனும் உள்ளது. உலர்ந்த கடதாசியை மென்மையாக்கும் பணி ஒரு இயந்திரத்தால் செய்யப்படுகிறது.
ராஜாங்கனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் குறைந்த வசதியுடைய இடமொன்றில் கைக்கடதாசி உற்பத்தி செய்யப்படுகின்றது. அத்துடன் இயற்கையான கைக்கடதாசி உற்பத்தித் திட்டத்தை 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து மேற்கொள்கின்றனர். இத்திட்டம் மிகவும் பயன்மிக்கதாக அமையும். இத்திட்டத்தை அவர்கள் பரந்தளவில் மேற்கொண்டு செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது பற்றி ஆராய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, அனுராதபுரம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயனானந்த உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நேரில் விஜயம் செய்தனர். இங்கு அமைச்சரை சந்திந்த கைக்கடதாசி தயாரிப்புக் குழுவினர் மாதத்திற்கு 8,000 – 10,000 வரையான கைக்கடதாசியை தயாரிக்க முடியுமெனவும் அதற்குத் தேவையான உபகரணங்கள் இன்னும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இலங்கை அரசின் குடிசைக் கைத் தொழில் அமைச்சின் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள இந்தக் குழுவினர் தற்போது முயற்சி எடுத்துள்ளனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.