இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அருகே நேற்று வியாழக்கிழமை அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என செய்தியாளர் அறிவித்துள்ளார்
இந்த சந்தர்ப்பத்தை காணொளியாக பதிவுசெய்த ஊடகவியலாளர்களின் கமாராக்கள் மீதும் இலங்கைப் பொலிசாரால் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கைதுகள் தொடர்பாக எமக்கு கிடைத்த மேலதிக விபரங்கள் மூலம் அன்றைய தினம் பொலிசார் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்;று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாரளுமன்றத்திற்கு அருகில், பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சிறந்த தொழிற்சங்க வாதியுமான ஜோசப் ஸ்டாலின் மற்றும் பௌத்த பிக்குகள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் கீழான ஒழுங்குவிதிகள் நேற்று வியாழக்கிழமையன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், விரிவுரையாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பலர் இந்த விரும்பத்தகாத சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உயர்கல்வியை தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்று இந்த உத்தேச கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தினிடையே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் பலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டதால் , போராட்டம் நடத்திய 31 பேர்வரை இலங்கைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவங்கள் நடைபெற்றபோது, கைதுகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை காணொளி மூலம் பதிவுசெய்த சில ஊடகவியலாளர்களின் கமராக்களையும் பெண் பொலிஸ் சிப்பாய்கள் சிலர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.