“இந்த அரசாங்கம் மக்களைக் கைது செய்வதுடன், சாதாதாரண ஆர்ப்பாட்டங்களைக் கூட கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கின்றது. அதேவேளை ஊடகங்களையும் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மீது கறுப்பு நிழல் வரலாறு உள்ளது. அதனையே இப்போது காட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு .அரசாங்கம் மீண்டும் அடக்குமுறைகளை கையாள முயற்சிக்கின்றது”
இவ்வாறு தெரிவித்தார் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரித் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ” இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரட்ண ஆகியோரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தாம் எதிர்கொள்ளும் துன்பங்களாலேயே வீதிக்கு இறங்கியுள்ளனர். அத்துடன் நாட்டின் சொத்துக்களை விற்கும் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
இவ்வாறாக சமூகத்திற்கு விரோதமான பாதிப்புக்களை எதிர்த்து வீதிக்கு மக்கள் இறங்கும் போது அதனை தடுக்க நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. கைதுகள் இவற்றிக்கு பரிகாரமாக இருக்காது. சுகாதார பணிப்பாளரினால் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மசாஜ் நிலையங்களை நடத்திச் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.
பொதுப் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரையில் பணியாற்றும் நிறுவனங்களும் நடத்திச் செல்லப்படுகின்றன. ஆனால் தமது பிரச்சினைகளுக்கான ஆர்ப்பாட்டங்களை தடுக்கின்றனர்” இவ்வாறு கண்டனத்தைத் தெரிவித்தார் ஜேவியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க.