மன்னார் நிருபர்
(14-07-2021)
மன்னார் மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘பைஸர்’ கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் இன்று (14) புதன் கிழமை காலை 8 மணி தொடக்கம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச செயலகம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் கடற்பரப்பில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக இந்திய மீனவர்கள் ஊடாக நாட்டுக்குள் கொரோனா தொற்றின் திரிவான டெல்டா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு அண்மையில் 2 ஆம் கட்டமாக 22 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகளை சமூகத்திற்கு வழங்கும் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய கரையோர கிராமங்களில் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன் கிழமை (14) மன்னார் மாவட்டத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் ,தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி , சுகாதார துறையினர் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் முப்படையினருடைய ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.