சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்)
சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர் ஐ நா மனித உரிமைகள் ஆணையரிடமிருந்து இலங்கையில் நிலவும் சூழல்கள் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்று வெளியானது. அரசால் முன்னெடுக்கப்படும் துன்புறுத்தல்களும் அட்டூழியங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.
‘` இலங்கையில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் ஆகியோர் மீது அரசு அல்லது அரசின் அங்கமாக இருக்கும் அமைப்புகள் மூலம் முன்னெடுக்கும் அனைத்து வகையான கண்காணிப்பு, அச்சுறுத்தும் விஜயங்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றை உடனடியாக நிறுத்தி, சிவில் சமூகத்தின் நியாயமான நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான தடைகள் விதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் வலியுறுத்துகிறார்“ என்று அந்த அறிக்கை கூறியது.
ஆனால், ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் மிஷேல் பஷாலே அம்மையார் கூறியதிலிருந்த குறிப்பு மற்றும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு, அந்த அறிக்கையில் கூறியுள்ளவற்றைக் கடைப்பிடித்து நாட்டை மேலும் அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலிருந்து காப்பாற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக-ஐ நா அறிக்கைக்கு நேர்மாறாக நடக்கிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றம், சர்வதேச சமூகம், கொடையாளி நாடுகள், ஐ நா மனித உரிமைகள் ஆணையம் என்று யார் கூறுவதையும் தாங்கள் கேட்க மாட்டோம், அவர்கள் கூறுவது எதுவும் தம்மைக் கட்டுப்படுத்தாது, யாருடைய பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை, `அனைத்தும் யாம் அறிவோம்` எனும் போக்கில் இலங்கை அரசு ஆபத்தான ஒரு பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள்-குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள்- தொடர்ந்து அரசின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பல செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர், காணாமல் போயினர், கடத்தப்பட்டனர் அல்லது மாயமாயினர். அவர்கள் அனைவரும் மோசமான மனித உரிமை மீறல்கள், ஊழல்களை வெளிப்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் அல்லது பொதுவாகப் பாரபட்சமின்றி செய்திகளை வெளியிட்டவர்கள். இதில் தெரிந்தே கொல்லப்பட்டவர்கள்.
மயில்வாகனம் நிமலராஜன், ஐயாதுரை நடேசன், சிவராம், லசந்த விக்ரமதுஙக, பிரகீத் எக்நெலிகொட என்று இந்தப் பட்டியல் நீளும். விசாரணைகள், குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்படுவது ஆகியவை காணல் நீர். அதை எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல என்பது உலகறிந்த விஷயம்.
`துரத்தும் சிங்கம்`
இயல்பாகவே சிங்கத்திற்கு ஒரு குணம் உண்டு. அனைவரும் தம்மைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கிற அந்த மேலாதிக்க எண்ணம் காரணமாக தேவையுள்ளதோ இல்லையோ காட்டிலுள்ள விலங்குகளை அச்சுறுத்தி எப்போதும் அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பதே அந்த குணம். ஆனால் இறுமாப்பு கொண்ட சிங்கங்கள் காட்டெருமைகளால் தூக்கி வீசப்படுவது அடிக்கடி நடக்கும், ஆனால் சிங்கம் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்து கூட்டம் சேர்ந்து `குடும்ப ஆட்சியை` முன்னெடுத்து தனது இருப்பை நிலைநிறுத்தி கொள்ளும்.
அதேபோன்று இலங்கை அரசு தனது தொடர்ந்து துன்புறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்களின் உரிமைகள் மற்றும் நியாயமான விஷயங்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களை உப்புசப்பில்லாத காரணஙக்ளுகாக விரட்டி துரத்தித் துன்புறுத்தப்படுவது நடைபெறுகிறது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக்காக என்று கூறி அவர்கள் அழைக்கப்பட்ட காரணங்கள் சட்டத்தின் முன்னர் செல்லுபடியாகாது என்று மூத்த சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.
செய்தியாளர் செல்வராசா நிலாந்தன் இப்போது செயல்பாட்டில் இல்லாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பிலிருந்தார் என்று கூறப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம்`விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர்` என்று கூறி அரசு மார்த்தட்டக் கொண்டது. ஆனாலும் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்று கேட்டு ஊடகவியளார்களும் மற்றவர்களும் தொந்தரவு செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
விசாரணைக்கென்று அழைக்கப்பட்ட நிலாந்தனிடம் அவருக்கு `விடுதலைப் புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த தயாமோகனுடன் தொடர்பிருந்ததா? பட்டி நாதம் மற்றும் மீனகம் இணையதளத்தை நடத்துவதில் ஈடுபட்டாரா` என்பது உட்பட பல விஷயங்கள் துருவித்துருவிக் கேட்கப்பட்டன. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் அவரது சமூக ஊடகத் தகவல்கள், வங்கிக் கணக்குகள், கடவுச் சொற்கள் ஆகியவை கேட்டு, மிரட்டிப் பெறப்பட்டுள்ளன.
“நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரா? உங்கள் உறவினர்கள் யாராவது விடுதலிப் புலிகளின் இருந்தார்களா? நீங்கள் புலிகளுக்கு உதவியுள்ளீர்களா? அவர்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன? “ என்று அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கூறிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
நிலாந்தனிடம் அவர் அரசு சாரா அமைப்பு ஏதாவது நடத்துகிறாரா-ஆம் என்றால் அதற்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது, அவரது ஊடகப் பணி என்ன என்றும் விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது.
அவர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலராகவும் சுதந்திர ஊடகவியலாளராகவும்செயல்படுகிறார்.
அஞ்சலி, அச்சுறுத்தல், அராஜகம்
இந்த மாதத்தின் முற்பகுதியில் மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் சசிகரன் புண்ணியமூர்த்தி `நான்காம் மாடி` அதிகாரிகளால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். காரணம்-இந்தாண்டு ஜனவரி மாதம் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று கூறப்படுவது.
ஆனால் அந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இந்தியா அல்லது இலங்கைத் தரப்பில் எவ்வித விசாரணைகளும் இல்லை. நடுக்கடலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தில் `மர்மமான சூழலில்` தீ பிடித்து மூழ்கியது. அதில் கருகிப் போயிருந்த நான்கு இந்திய மீனவர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது. அத்துடன் அந்த விஷயம் `ஆழமாகப் புதைக்கப்பட்டது`.
“நான் ஒரு ஊடகவியலாளர் எனும் வகையில் அந்த கூட்டத்தில் பங்குபெற்றேன். ஆனால் நானே அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததுபோல் என்னை விசாரித்தார்கள்“ என்று சசி உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தான் நாட்டிற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்று கூறும் சசி, “ஊடகவியலாளர்கள் எனும் போர்வையில் சிலர் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று கூறி என்னை விசாரித்தனர்“ என்கிறார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் அடிக்கடி விசாரணை என்கிற பெயரில் அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முருகுப்பிள்ளை கோகுலதாசன் எனும் ஊடகவியலாளர் இப்போது 225 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. செய்தியாளர்களை மௌனிக்கச் செய்ய பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக அரசு பயன்படுத்தி வருகிறது எனும் குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
அந்த சமயத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆர் எஸ் எப், அவர் ஆண்டு தோறும் தமிழ்ச் சமூகம் நவம்பர் மாதம் அனுசரிக்கும் ஒரு நிகழ்வுக்கான ஒரு குறிப்பை மட்டுமே சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் என்று கூறி அவரது கைதை கண்டிருந்தது.
“அபத்தமான குற்றச்சாட்டுக்கள்“
“முருகுப்பிள்ளை கோகுலதாசனின் கைதும், தொடர்ந்து அபத்தமான குற்றச்சாட்டின் கீழ் அவர் தடுத்து வைத்திருப்பதும் ஊடக சுதந்திரத்தை திட்டமிட்டு ஒடுக்கும் செயல் “என்று அந்த அமைப்பின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைவர் டானியேல் பஸ்டார்ட் அப்போது கூறியிருந்தார்.
“இலங்கையின் சட்ட மாஅதிபரை அவரை உடனடியாக நிபந்தனைகள் இன்றி விடுவிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழர்கள் நலனுக்காக, அவர்களின் பிரச்சனைகளுக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைச் செய்திகளாக எழுதியோ அல்லது வெளியிடும் செய்தியாளர்களை பாதுகாப்பு படையினர் அச்சுறுத்தி துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்“.
இந்தாண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முகுந்தன் திவன்யா மற்றும் விமல் ராஜ் என்கிற இரு சமூக ஊடகச் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு இன்று வரை வெளியுலகத் தொடர்புகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நடத்தி வந்த` டியூப் தமிழ்` யூடியூப் ஊடகம் கூறுகிறது. அந்த ஊடகத்தில் அவர்கள் அரசுக்கு எதிரான செய்திகளைப் பரப்பினார்கள் என்று அரச தரப்பு குற்றஞ்சாட்டியது.
கடந்த மே மாதம் மட்டக்களப்பு கடற்கரையின் கொடூரமாக முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றிய பத்துபேர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் நிலை, சிறுபான்மையினரின் பிரச்சனைகள், ஆட்கடத்தல் போன்ற புலனாய்வு செய்திகள் மட்டுமின்றி வடக்கு கிழக்குப் பகுதிகளில் அன்றாடம் நடக்கும் செய்திகளைக் கூட பாரபட்சமின்றி, ஆதாரங்களுடன் வெளியிடுவது ஆபத்து நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.
அப்படியான செய்திகளை வெளியிடுபவர்கள் இரண்டு ஆபத்துக்களை எதிர்கொள்கிறார்கள். ஒன்று `சட்டரீதியாக` விசாரணைக்கு என்று பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு `முறையான விசாரணைக்கு` பின்னர் கைது எனும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மாறாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவர்களின் புகார்களைப் பதிவு செய்ய பொலிசார் மறுப்பார்கள்.
எப்படிப் பார்த்தாலும், `அரச` பயங்கரவாதம் மீண்டும் திரும்பியுள்ளது!