பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.
தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை நிராகரிப்பதில் தொடங்கி தமிழ் மக்களுடைய எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயங்கரவாதத் தடைச்சட்டம் போல பயன்படுத்தியது.
இதில் விதிவிலக்காக காணப்படுவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஒரு பேரணிதான். அங்கேயும் கூட தொடக்கத்தில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கக்கூடிய நபர்களை முடக்கப்பார்த்தது. ஆனால் பேரணி அதிகம் மக்கள்மயப்பட்ட காரணத்தால் ஒரு கட்டத்தில் அது அரசாங்கத்தால் தடுக்க முடியாத ஒரு எல்லைக்கு போய்விட்டது. ஆனால் அதுவல்லாத ஏனைய எல்லாப் போராட்டங்களின் போதும் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை வெற்றிகரமாகக் கையாண்டு பெரும்பாலான போராட்டங்களை தடுத்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்கிறது.
இது இப்பொழுதுதான் அது சிங்கள கார்ட்டூனிஸ்ட்களுக்கு தெரிகின்றதா? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை முடக்கியதில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கும் ஒரு பங்குண்டு. அதைவிட முக்கியமாக அவ்வாறு எதிர்ப்புக் காட்டத் தேவையான சக்தி எதிர்க்கட்சிகளிடமும் இருக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இப்பொழுது எந்த மகாசங்கம் ஹிட்லரைப் போல ஒரு தலைவர் வேண்டும் என்று கேட்டதோ எந்த மகா சங்கம் தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ராஜபக்ஷக்களுக்கு வழங்குமாறு கேட்டதோ அதே மகா சங்கத்தின் பிரதிநிதிகளை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போகும் நிலைமை இப்போது வந்திருக்கிறது. இவ்வாறு தூக்கப்பட்டது மகா சங்கத்தின் ஒரு சிறு பிரிவுதான்.அது முழு மகா சங்கத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஆனால் மூன்றில் இரண்டு தனிச் சிங்கள பெரும்பான்மை என்பது அதன் மினுக்கத்தை இழக்க தொடங்கிவிட்டது என்பதை அக்காட்சிகள் நமக்கு நிரூபிக்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தனிமைப்படுத்த சட்டங்களை தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தினார்கள்.
தமிழ் மக்களை ஒடுக்க அவர்களுக்கு ஒரு சட்டம் தேவை. அது பயங்கரவாத தடைச்சட்டம் ஆகவும் இருக்கலாம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டமாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு சட்டத்தை முன்வைத்து அவர்கள் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதைத்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் செய்தார்கள்.
இப்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. அது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் நேரடி விளைவு. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்யப் போவதாகக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில்தான் தனிமைப்படுத்தல் சட்டத்தை உபயோகித்து போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன.
எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லையென்றாலும் அவர்களுக்கு போராட்டங்களை நசுக்க வேறு ஏதோ ஒரு சட்டம் இருக்கும் என்பதுதான். இது எதைக் காட்டுகிறது ?
ஒடுக்கும் மனோநிலையைத்தான் காட்டுகிறது. அந்த மனோநிலையானது எப்பொழுதும் தனக்கு வசதியாக சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும். எனவே இங்கே பிரச்சினை என்னவென்றால் சட்டங்கள் அல்ல. சட்டங்கள் கருவிகளே. பிரச்சினையாக இருப்பது அந்த கருவிகளைப் பயன்படுத்தி ஒடுக்கும் மனோநிலைதான்.
அண்மையில் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர் என்னிடம் சொன்னார்.
“தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் புகைய தொடங்கிவிட்டன. ஒரு கட்டத்தில் அவை நெருப்பாக மூளும். அரசாங்கத்துக்கு எதிரான இந்த திரட்சியில் தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுத்தால்தான் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கலாம். சிங்கள மக்களோடு இணையாமல் இதுபோன்ற அரசாங்கங்களை தோற்கடிக்க முடியாது என்பதே கடந்த கால வரலாறு” என்று.
அதில் உண்மை உண்டு. இலங்கைத் தீவு பிரித்தானியரிடம் இருந்து விடுபட்டதிலிருந்து இன்று வரையிலுமான தேர்தல் களத்தை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். எந்த ஒரு கட்சியாவது பெரும் பலத்தோடு ஆட்சிக்கு வரும் பொழுது அதனை வீழ்த்துவதற்கு எதிர்கட்சிகள் அணி சேர்க்கின்றன.
இந்த அணிச்சேர்க்கைகளில் தர்மம் இல்லாமல் இருக்கலாம். இந்த அணி சேர்க்கைகளில் இனவாதமும் இருக்கும். ஆனாலும் இவ்வாறான கூட்டு முன்னணிகள் மூலம்தான் மிகப் பலம் பொருந்திய ஓர் அரசாங்கம் எப்பொழுதும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிச் சேர்க்கை என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படும் ஒரு போக்கு.
வெல்லக் கடினமான பெரும்பான்மையோடு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டுக்குப் போகும். அப்படித்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெல்லக் கடினமான ஒரு பெரும்பான்மையைப் பெறும் பொழுது ஐக்கிய தேசிய கட்சி தமிழ் முஸ்லிம் தரப்புக்களோடு இணைந்து அதை எதிர்கொள்ளும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அதுதான் நடந்தது. இந்த வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் சிந்தித்தால் இப்பொழுது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கசப்பு வெறுப்பு ஏமாற்றம் போன்றவற்றை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு திரட்சியாக மாற்றுவதற்கு மறுபடியும் தமிழ் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுத் தேவை என்ற ஒரு அபிப்பிராயம் ஒருபகுதி விமர்சகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஆனால் இங்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் 2015ஆம் ஆண்டு அப்படி ஒரு கூட்டை உருவாக்கி தமது ஆட்சி கவிழ்க்கப்பட்ட அனுபவத்தை வைத்துத்தான் ராஜபக்சக்கள் தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ஒரு முடிவுக்கு போனார்கள். மிகக் குறிப்பாக 2018 ஆட்சி குழப்பத்தின் போதும் மஹிந்த ராஜபக்ச நினைத்தபடி காய்களை நகர்த்த முடியாமல் போனது.
அதற்கு காரணம் தமிழ் சிங்கள பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதுதான். அதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்பை யார் ஆள்வது என்பதனை தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தீர்மானித்தார்கள்.
அதை வைத்துதான் ராஜபக்சக்கள் ஒரு முடிவை எடுத்தார்கள். இனிமேலும் அவ்வாறு சிறிய மக்கள் கூட்டங்கள் கொழும்பை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு ஒரு நிலைமை வரக்கூடாது என்று. அவர்களுடைய அவ்வாறான சிந்தனைக்கு ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழிகளைத் திறந்து விட்டது. முடிவில் மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையைப் பெற்று அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
இப்பொழுது அந்தப் பெரும்பான்மை அதன் மினுக்கத்தை இழக்கத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் புதிய கூட்டணிகளைப் பற்றிச் சிந்திப்பதாக தெரிகிறது.அதற்குரிய நகர்வுகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் எந்த அடிப்படையில் ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்கிறார்களோ அந்த அடிப்படை இப்பொழுதும் பலமாக உண்டு என்பதுதான்.
கொழும்பை யார் ஆள்வது என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்மானிக்கக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த அடிப்படையில்தான் தனிச்சிங்கள வாக்குகளை கேட்டுப் பெற்றார்கள். அவ்வாறு தனிச் சிங்கள வாக்குகளை கேட்பது என்பது பிரயோகத்தில் தமிழ் சிங்கள மக்களுக்கு எதிரானதுதான்.
எனவே தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான உணர்வுகளை தொடர்ந்தும் தக்கவைப்பதன் மூலம் அவர்கள் இப்பொழுது ஆட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் எளிதாகக் கடந்து போகலாம்.
அதற்குரிய மிக வாய்ப்பான ஒரு சந்தர்ப்பத்தை வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்படவிருக்கும் ஒரு பொறிமுறை அவர்களுக்கு வழங்கும். கடந்த ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை அது. அப்பொறிமுறை வரும் செப்டம்பர் மாதம் செயற்படத் தொடங்கும்.
வரும் செப்டம்பர் மாதம் ஐ.நாவின் நிதி ஆண்டு தொடங்கும். அப்பொழுது தான் அப்பொறிமுறைக்குத் தேவையான நிதி வழங்கப்படும். அவ்வாறான ஒரு பொறிமுறை செயற்படத் தொடங்கும் பொழுது அது கொழும்பில் அதிகரித்த அளவில் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஒரு இன அலையையும் உற்பத்தி செய்யப் போதுமாக இருக்கும். அந்த இன அலையை வைத்து அரசாங்கம் இப்போது ஏற்பட்டிருக்கும் எல்லா குழப்பங்களையும் வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார எதிர்விளைவுகளையும் இலகுவாகக் கடந்து போகக் கூடியதாக இருக்குமா?