பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன நேரடியாக சென்று பார்வை.
(மன்னார் நிருபர்)
(16-07-2021)
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள 6 இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று வெள்ளிக்கிழமை (16) காலை மன்னாரிற்கு விஜயம் செய்து சேதத்திற்கு உள்ளான கத்தோலிக்க ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் பார்வையிட்டார்.
மன்னாரிற்கு இன்று வெள்ளிக்கிழமை (16) காலை விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த ஹம்பகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு சென்று ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை நேரம் மன்னார் பகுதியில் அமைந்துள்ள 6 கத்தோலிக்க ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தையும், ஏற்பட்ட தேசத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாருடன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள உரிய பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.