விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராக எமக்குள்ள சுதந்திரத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்த எம்மை பலாத்காரமாக கைது செய்தார்கள். பின்னர் நீதி மன்றத்தில் நாம் ஆஜர் செய்யப்பட்டபோது, அங்கு எமக்கு பிணை வழங்கப்பெற்றது. ஆனால் பின்னர் எம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பொலிசார் தன்னிச்சையாக எடுத்து முடிவிற்கு அமைய எங்கள் குழுவில் அனைவரையும், முல்லைத் தீவிற்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு நாம் எவ்வித நியாயமற்ற வகையிலேயே நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்
இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் அவரோடு இணைந்த தொழிற்சங்கவாதிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்கள்.
எந்தவித நியாயமற்ற முறையிலேயே நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது விடுதலையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எமது பக்க நியாயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்திய சகல ஊடகங்களுக்கும் நன்றியைக் கூறுகின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப் படை முகாமில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.
அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து பொலிஸ் பஸ்ஸில் முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டு, கேப்பாப்புலவு விமானப் படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதையடுத்து, 8 நாட்களின் பின்னர், நேற்று இரவு 8.30 மணியளவில் அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டிய ஒரு தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று இன்று காலை கொழும்பில் நடைபெற்ற சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் கோசங்கள் முன்வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.