தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ரெலோ கட்சி ஈடுபட்டு வருவது பலர் அறிந்த விடயமே. எனினும் இந்த முயற்சியில் ரெலோ தனது இலக்கை அடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக ரெலோ வட்டாரங்கள் வவுனியாவில் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் .இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக உள்ளவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவே எனவும் ரெலோ உறுப்பினர்கள் சிலர் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. அப்போது விக்னேஸ்வரன் சார்ந்த பிரமுகர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகள் திருப்பியானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஒன்பது கட்சிகளின் கூட்டு முன்னெடுக்கப்பட்டபோது அந்தக் கூட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் என்பதால் மீண்டும் அவர்கள் கூட்டமைப்பிற்குள்ளேயே வர வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்ட விடயத்தினை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்க் கட்சிகள் பொதுவான அரசியலமைப்பு தீர்வுத்திட்ட முன்மொழிவைச் செய்வதற்கு மாவை.சோ.சேனாதிராஜா இணக்கம் வெளியிட்டு பின்னர் அமைதி காத்தமை சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இதுகால வரையிலும் கூட்டமைப்பில் காணப்படுகின்ற குறைப்பாடுகளுக்கு தமிழரசுக்கட்சி காரணமாகியுள்ளமை தொடர்பான விடயங்கள் இன்னமும் சீர் செய்யப்படாத நிலையில் ரெலோவின் முயற்சி வெற்றி அளிக்குமா என்று கேள்வி எழுப்பபட்டது.
அதுமட்டுமன்றி, ரெலோ இவ்விதமான அனைத்து விடயங்களை மறந்தாலும் இறுதியாக பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனான கூட்டமைப்பின் சந்திப்பின் பின்னர் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் ரெலோவின் முயற்சி குறித்து கருத்துக்கள் எழுந்தபோது மாவை.சோ.சேனாதிராஜா அமைதி காத்தமையும் சுட்டிக்கட்டப்பட்டது.
இத்தருணத்தில் ரெலோவின் தலைவரும் பேச்சாளரும் “கூட்டமைப்பினுள் நீங்கள் குறிப்பிடுகின்ற பல விடயங்கள் காணப்பட்டாலும் நாம் சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக இருக்கின்றோம்.
தற்போது நாம் இதய சுத்தியுடனேயே ஒருமித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி வராது விட்டாலும் அக்கட்சியின் முழுமையான ஆதரவு இருப்பதாக தலைவர் கூறியுள்ளார்” என்று பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.