(மன்னார் நிருபர்)
(20-07-2021)
‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும், இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக விளக்கேற்றலுடன் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து மாவட்டச் செயலக அலுவலர்கள் புலவரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆடிப்பிறப்பு தொடர்பில் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவு ஆகியவை இடம் பெற்றது.
இதன் போது மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.