கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி?
கொழும்பில் தற்போது தங்கியுள்ள சீனப் பிரஜை ஒருவர், கொழும்புத் துறைமுகத்திற்குள் தேவையெதுவும் இன்றி நுழைய வேண்டியது எதற்காக? என்ற கேள்வியை தற்போது கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் பற்றி எமது செய்தியாளர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் , கொழும்பு துறைமுகத்துக்குள் அநாவசியமாக நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கையில் , கொழும்பு துறைமுகத்துக்கும் கொழும்பு துறைமுக நகரத்துக்கும் பயணிப்பதற்கான அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்கு மனித வளத்தை வழங்கும் சீன நிறுவனத்தின் உரிமையாளரான சீனப் பிரஜை ஒருவரால் அநாவசியமாக துறைமுகத்துக்குள் நால்வர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் 3 ஆம் இலக்க விமலதர்ம நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த துறைமுக அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜை தவிர்ந்த ஏனைய நால்வரும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். துறைமுகத்துக்குள் நபர்களை அழைத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். எனினும் இந்த சீனப்பிரஜை தொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரவிக்கின்றன.