இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமது மொழி தொடர்பான சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து பணி செய்யவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்ர் அவர்கள். பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74வது சிரார்த்த தினம் இன்றாகும். இன்றைய நாளில் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூருவது பொருத்தமாகும். சுவாமியின் தமிழ்த் தொண்டுகளில் தலைசிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும்.
அவர் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலை கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் கோயிலில், நாளும் செந்தமிழ் இசை பரப்பிய ஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும் மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.
முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி விபுலாநந்தரை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள்.
நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய ‘நாச்சியார் நான்மணிமாலை’ வித்துவான் ஒளவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.
இரண்டாம் நாள் விழாவில் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.
சுவாமி விபுலாநந்தர் (ஜூலை 19 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
காரைதீவில் பிறந்த மயில்வாகனன் (இயற்பெயர்) தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி, அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராகவிளங்கிய விபுலானந்தர் சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் ஆற்றிய சேவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன. ‘சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்’ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் 127 தமிழ் மொழி ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
அடிகளார் ஆக்கிய ‘மதங்க சூளாமணி’ நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ‘நாடகத் தமிழ்’ என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ‘மதங்க சூளாமணி’ நூலை எழுதினார்.
1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் ‘பிரபுத்த பாரதா’ என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதேவேளை, சுப்ரமணிய பாரதிக்கு ‘மகாகவி’ என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதிலும் இவர் முனைப்பாக இருந்தார்.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் மறைந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது.
சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற ‘கங்கையில் விடுத்த ஓலை’ என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக் கொண்டிருக்கின்றன. அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.