மன்னார் நிருபர்
(20-07-2021)
வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த வாரம் கண்டி வீதி புகையிரத வீதி கரையில் சட்டவிரோதமாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிராக வவுனியா பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டது .
இந்நிலையில் அப்பகுதியில் தாண்டிக்குளம் கிராம அலுவலரும் தனது கடமைகளை பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார் .
இதனை அவதானித்த சட்டவிரோதமாக விற்பனை நிலையம் அமைத்த நபர் ஒருவர் குறித்த கிராம அலுவலகரை மகாறம்பைக்குளம் பகுதியில் கடந்த வாரம் வழிமறித்து வாய் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் . உடனடியாக தாக்குதலுக்குள்ளாகிய கிராம அலுவலகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துகொண்டார் .
சந்தேக நபர் தலைமறைவாகியதையடுத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் அண்மையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் .
கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக சந்தேக நபரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .